பேசுவோமா

Images
  • p2

சும்மா இருக்கலாம்.. கொக்கைப் போல...

சிறு பிள்ளைகள் ஓடி ஆடி, துறுதுறுவென்று இருப்பதைப் பெரும்பாலும் ரசித்தாலும், அளவுக்கு மீறி சேட்டை செய்யும்போது “சும்மா இரு!” என்று அதட்டாமல் இருக்க முடியாது.
கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் எவ்வளவு பெரிய கட்டளை அது! சும்மா இருக்க முதலில் நம்மால் முடியுமா?


பதின்ம வயதினர் பல நேரங்களில் பெற்றோர் மீது வைக்கும் குற்றச்சாட்டு, “தங்களது நிறைவேறாத ஆசைகளை எங்கள் மீது திணிக்கிறார்கள்” என்பதுதான். ஒருவேளை இதுவும் அந்த வகையைச் சார்ந்ததுதானோ?


பசி, தூக்கத்துக்கு இடமின்றி வேலைச் சுமை அதிகம் என்று புலம்புவோம். ஆனால் ஒரு மாதம் கட்டாய மருத்துவ விடுப்பில் இருந்து பார்த்தால் நம் புலம்பல் அப்படியே மாறியிருக்கும். சும்மா இருப்பது சுகமல்ல, சுமை என்போம்.
சோம்பேறிகளைக்கூடக் கட்டாயப்படுத்திச் சும்மா இருக்கச் சொல்வது சுலபமல்ல.


சும்மா சொல்லி விடலாம், சும்மா இருக்கச் சொல்லி; செயலில் அது சாத்தியமா? உடலைப் பிடித்துக் கட்டி வைத்தாலும் மனம் ஓர் இடத்தில், ஓர் எண்ணத்தில் நிலைத்திருக்குமா? ஒளியையும் விஞ்சக்கூடியதல்லவா உள்ளத்தின் வேகம்?


இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதிதாசன் கூண்டுக் கிளியைப் பார்த்து, “அக்கா, அக்கா என்று அழைக்கிறாயே அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்” என்று பாடல் எழுதியிருக்கிறார். எல்லா எண்ணங்களிலிருந்தும் விட்டு விடுதலையாகி சும்மா இருக்கும் நிலையை விலை கொடுத்தும் வாங்க முடியாது என்று உணரும்போது அந்தப் பாடல்வரி எனக்கு நினைவில் வந்தது. கடையில் சென்று சுக்கு, மிளகு வாங்குவது போல ‘சும்மா இருத்தலை’ வாங்க முடியுமா?


குரங்கை நினையாமல் மருந்து குடிப்பது போல சும்மா இருப்பதெல்லாம் நடப்பில் வராதது என்போரும் உண்டு; நடந்து காட்டுவதாக நடிப்போரும் உண்டு.
சில நேரங்களில் சிலர் வெளிப் பார்வைக்குச் சும்மா இருப்பதுபோல தோன்றினாலும் அதன் நோக்கம் வேறாயிருக்கலாம்; கொக்கின் ஒற்றைக் கால் தவம் போல.


கொக்குக்கு ஒன்றே மதி என்பார்கள் பெரியோர். அதாவது தனக்கான இரை எந்த அளவில் இருக்கவேண்டும் என்பதை அது முன்னரே திட்டமிடுவதால், சரியான இரைக்காகக் காத்திருப்பது அதன் இயல்பு.


ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை அது காத்திருக்கும். தன் பசிக்குப் போதுமான பெரிய மீன் கிடைக்கும் வரை அது சும்மாயிருக்கும்.
அப்படி அது பொறுமையாக நிற்பதை ஒற்றைக் காலில் தவமிருப்பதாகச் சுவைபடக் கூறுவார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் அது சுவாரசியத்துக்காகச் சொல்லப்பட்டதுபோல் தோன்றினாலும், தவம் என்ற வார்த்தை ஆழமான பொருள் தருவது.


தன்னைச் சுற்றி எது நடந்தாலும் கவனம் குலையாத பொறுமை, அதேபோல் கிடைக்கப்போகும் ஆனந்த நிலைக்காக முழு கவனக் குவிப்புடன் காத்திருத்தல், இதனையே தவம் என்கின்றனர் பெரியோர். செயலற்றுச் சும்மா இருப்பதுபோல் தோன்றினாலும் அது முழு விழிப்பு நிலை.அப்படித்தான் கொக்கு நின்றிருக்கும். அசைவற்று நின்றிருக்கும்...
அதற்குத் தேவைப்படாத சிறிய மீன்கள் மிக அருகே நீந்திச் சென்றாலும் சலனமின்றி நின்றிருக்கும். ஆக ஆபத்து ஏதுமில்லை என்று பயம் நீங்கி அந்தப் பக்கமாக மீன்கள் ஓட ஆரம்பிக்கும். அப்போது தனக்கான மீனை ஒரே குத்தில் கவ்விக்கொள்ளும் நேர்த்தி அதற்குண்டு. கொக்கு சும்மா இருப்பதும் செயல்திறனில் சேர்த்தி தான்.


வாழ்க்கைமுறையை வகுத்துத் தந்த வள்ளுவர் கூட, கொக்கின் இயல்பைக் கவனித்து, எந்த நேரத்தில் அதை மனிதன் பின்பற்றவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்.
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து”.


அதாவது காலம் கைகூடும் வரையிலும் பொறுமையாகக் காத்திருப்பதில் கொக்கைப் போல் இரு என்றும் தகுந்த காலம் வந்ததும் சரியாகச் செய்து முடிப்பதில் அது குறிதவறாது குத்துவதுபோல் நூறு விழுக்காட்டுக் கச்சிதத்துடன் இரு என்றும் மனிதனுக்கு அறிவுறுத்துகிறார்.


நம்மால் சும்மா இருக்க முடியாவிட்டாலும் சும்மா இருக்கும் கொக்கிடம் நாம் கற்கவேண்டிய பாடங்கள் பல உண்டு.
சும்மா இருக்க முடியும் என்றால், விழிப்புணர்வும் நேர்த்தியும் கொண்ட கொக்கைப் போல இருப்போம். முடியாதென்றால் நம் சிந்தை, சொல், செயல் அனைத்தையும் ஆக்ககரமாய் அமைத்துக் கொள்வோம்.


அன்புடன்
கலைச்செல்வி வைத்தியநாதன்.
 

Top