Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

பரிவுப் பாலம்

வார இறுதியில் மாலை நேரத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அதன் பின்னர் அனைவரும் அருகிலிருந்த விரைவு உணவகத்திற்குப் போனோம். வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது தொழுகைக்கான அழைப்பு கேட்டது.

வாசிப்புநேரம் -

வார இறுதியில் மாலை நேரத்தில் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அதன் பின்னர் அனைவரும் அருகிலிருந்த விரைவு உணவகத்திற்குப் போனோம். வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது தொழுகைக்கான அழைப்பு கேட்டது.

வரிசையில் எங்களுக்குப் பின்னால் ஒருசில மலாய்க் குடும்பத்தினர் நின்றுகொண்டிருந்தனர். நோன்பு துறக்கும் நேரம் என்பதால், அவர்களை முதலில் உணவு வாங்க வழிவிட்டு நாங்கள் சென்று அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டோம்.

புன்னகைத்த முகத்தோடு நன்றி கூறிவிட்டு உணவு வாங்கச் சென்றனர் மலாய்க் குடும்பத்தினர் சற்று நேரத்தில் ஒரு தட்டுடன் நாங்கள் அமர்ந்திருந்த மேசையை நோக்கி வந்தனர். என் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கியதாகச் சொல்லி, மீண்டும் நன்றி கூறிவிட்டு நோன்பு துறக்கச் சென்றனர்.

இது இயல்பாக நடந்த ஒரு சம்பவம். என்றாலும் இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் பல. ஆங்கிலத்தில் ‘Empathy’ என்று சொல்லக்கூடிய தன்னலம் பாராமல் பிறர் நலம் காக்கும் பண்பைக் கடைப்பிடித்தால் பல சந்தர்ப்பங்களில் நாம் பொறாமை, பகைமை, வெறுப்பு போன்றவற்றைச் சம்பாதிப்பதைக் குறைக்கலாம். குறிப்பாக, பல்லின மக்கள் வாழும் சமுதாயத்தில் விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை அத்தியாவசியமான ஒன்றாக அமைகிறது.

இன்றைய பரபரப்பான சூழலில், அனைவரும் ஏதோ ஒன்றை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்நிலையில் மற்றவர்களின் மனநிலை, உணர்வு போன்றவற்றைப் பல வேளைகளில் மறந்துவிடுகிறோம். உண்மை நிலவரம் தெரியாமல் ஒருவரைப் பற்றி மற்றவரிடம் கருத்து பரிமாறுகிறோம்.

அதுவே மற்றவரின் நலன் கருதி செயல்படும்போது நாம் எடுக்கும் முடிவுகள், பகிர்ந்துகொள்ளும் கருத்துகள், பயன்படுத்தும் சொற்கள் போன்றவற்றில் நிதானம், தெளிவு ஏற்படும்.

பல வேளைகளில் உறவுகளுக்கிடையே விரிசல் ஏற்படுவதற்கும் முக்கியக் காரணம் சுயநலமே. அதுவே, பிரச்சினைகள் எழும்போது ஏன் ஒருவர் அவ்வாறு நடந்துகொள்கிறார் என்று ஒரு கணம் சிந்தித்துச் செயல்பட்டால் போதும். பல உறவுகளை நம்மால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.


அன்புடன்
காமாட்சி அபிமன்னன்

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்