பேசுவோமா

Images
  • p2

மாறவேண்டும்… மாற்றத்திற்கேற்ப…

சீனா, ஸ்வீடன் போன்ற நாடுகள் பணத்தாள்களையும் நாணயங்களையும் புழங்காத சமுதாயமாக உருமாறி வருகின்றன. சிங்கப்பூரும் அதற்கு விதிவிலக்கல்ல. உணவகம், பேரங்காடி, மருத்துவமனை, கல்வி நிலையம் எனப் பல இடங்களிலும் பணம் கட்டும் சேவை மின்னியல் முறைக்கு மாறிவருகிறது. அதுவும் இப்போது வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, பணத்தைத் திறன்பேசி வாயிலாகவும் கட்ட முடிகிறது.


பலமுறை கடைகளுக்குப் பணம் இல்லாமல் சென்றதுண்டு. திறன்பேசியில் வங்கிகளின் செயலியைப் பயன்படுத்தி, பணத்தைக் கட்டலாம் என்ற நம்பிக்கை. ஆனால் சில நேரங்களில், கடைக்குச் சென்ற பின் அந்த வசதி இல்லாமல் ஏமாந்துபோனதும் உண்டு. கையில் பணம் இல்லாத சிரமத்தை அப்போது எதிர்கொண்டிருக்கிறேன். அதே நேரம் செயலி செயலிழந்துவிட்டால், நாம் பணத்திற்கு என்ன செய்வது என்ற சிந்தனையும் எழுந்திருக்கிறது.

செயலியைக் கொண்டு பணம் கட்டத் தொடங்கிய நாள் முதல், பணம் செலவிடுவதைக் கணக்கில் வைத்துக்கொள்ளச் சிரமமாக உள்ளது. பணத்தைக் கையிலிருந்து எடுத்துக்கொடுக்கத் தேவை இல்லாத சூழ்நிலை. அதனால் பணத்தைச் செலவிடும் வலியும் தெரிவதில்லை. மாத இறுதியில், மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் வழி வரும் விவரங்களைப் பார்த்து இவ்வளவு செலவாகிவிட்டதா என்று எத்தனையோ முறை மலைத்துப்போயிருக்கிறேன். பல வேளைகளில் தேவையற்ற செலவு மட்டுமின்றி அதிகமாகவும் செலவு செய்திருப்பேன். செயலியைக் கொண்டு பணம் கட்டுவது வசதியாக இருந்தாலும், இது போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.


வயதானவர்கள் சிலர் அதிவேகத் தொழில்நுட்ப மாற்றங்களைச் சமாளிக்கச் சிரமப்படுகின்றனர். நமது தேசம் பணத்தாள்களின் புழக்கம் இல்லாத சமுதாயமாக மாறும் முயற்சியில் சுறுசுறுப்பாக முன்னேறிவருகிறது. ஏற்கெனவே வயதானவர்கள் சிலர் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு மாற்றங்களைத் திறம்படக் கையாள்வதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன். அது மகிழ்ச்சியைத் தருகிறது.

இவை ஒரு புறம் இருக்க, வங்கிகளின் செயலியைப் பயன்படுத்தும்போது தனிநபர் தொடர்பான தகவல் கசிவு ஏற்படக்கூடிய ஆபத்துகளாலும் மனத்தில் அச்சம் நிலவுகிறது. தனிநபர் தொடர்பான தகவல்களைப் பாதுகாக்கத் திட்டங்கள் உள்ளன. ஆனால் அரசாங்கம் மட்டும் முயற்சி எடுத்தால் போதாது. தனிநபர்களும் கவனமாக இருக்கவேண்டும். மின்னியல், தகவல் தொடர்பான திருட்டுச் சம்பவங்களிலிருந்து எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என யோசிப்பதும் அவசியம்.

திறன்பேசிகளுக்கெனச் சில பாதுகாப்புத் தொடர்பான செயலிகள் உள்ளன. கணினியில் நச்சு நிரல்கள் பரப்பப்படுவதைத் தடுக்கப் பாதுகாப்பு மென்பொருள்களைப் (Virus Protection Software) பொருத்துவது போல், திறன்பேசியிலும் அவ்வாறு செய்துகொள்ளலாம். வங்கிகளின் செயலியின் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தை அடிக்கடிச் சரிபார்ப்பதும் முக்கியம்.

பணத்தாள்களின் புழக்கத்தைக் குறைக்கப் பல நாடுகளும் முயன்றுவரும் காலக்கட்டத்தில், தனி நபர்களும் அவற்றுக்கு ஈடுகொடுத்துப் புதியனவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். பணப் பரிமாற்றம் பாதுகாப்பான முறையில் நடைபெறுகிறது என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும். மாற்றத்தைக் கண்டு அஞ்சாமல், அதற்கேற்ப நாம்தான் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அன்புடன்
ஜமுனா
 

Top