பேசுவோமா

Images
  • cover
    படங்கள்: Pixabay 

நடந்தது நன்மைக்கே

“உனக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா?”

இந்தக் கேள்வியை என் நண்பர் கேட்டபோது சாதாரணமாகத்தான் அதை எடுத்துக்கொண்டேன்.

மனத்தில் உடனே பல எண்ணங்கள் எழுந்தன.


கணக்குப் பாடங்களை ஒழுங்காக கவனிக்காமல் இருந்தது, தேர்வுகளுக்குப் போதுமான அளவு தயார் செய்யாமல் இருந்தது, சந்திப்புகளுக்குத் தாமதமாகச் சென்றது.

இப்படிப் பல.

அனைத்தும் பார்ப்பதற்கு ஓரளவு சிறியவையாகத் தோன்றினாலும் அவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும்போது வேறு மாதிரியான எண்ணம் உண்டாகிறது.

இன்னும் நன்றாகப் படித்திருந்தாலோ தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலோ வேறு பள்ளிக்குச் சென்றிருக்கலாம் அல்லது வேறு பாடத்திட்டங்களை எடுத்திருக்கலாம்.

நான் சந்தித்தவர்கள் வேறுபட்டிருக்கலாம். எனது வாழ்க்கையும் மாறியிருக்கலாம்.

சற்று வருத்தப்பட்டேன், இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாமோ என்று. பின்னர் மற்றொரு சிந்தனையும் பிறந்தது. என் செயல்களை மாற்றியிருந்தால் நான் இந்த நிலைமைக்கு வந்திருக்கமாட்டேன். எனக்குக் கிடைத்த அனுபவங்களோ இப்போதுள்ள நண்பர்களோ வேலையோ அமைந்திருக்காமல் போயிருக்கலாம்.

நமது ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு விளைவு உண்டு. அந்த விளைவுகளால் ஏற்படும் அனுபவங்கள் நமது குணங்களை வடிவமைக்கின்றன, நம்மைச் செதுக்குகின்றன.

பல நேரங்களில் நாம் எதிர்பார்த்த விதத்தில் ஒன்று நடக்காமல் போனால் சாதகமான முடிவை ஏற்படுத்த நாம் வேறென்ன செய்திருக்கலாம் என்றுதான் உடனே மனத்தில் எண்ணம் ஓடும். ஆனால் காலம் கடந்துவிட்டது. நடந்தது நடந்துவிட்டது. அதை யாராலும் மாற்றமுடியாது.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கோபம், சோகம், ஏமாற்றம் போன்ற பல உணர்வுகள் ஏற்படும். ஆனால் சிறிது காலம் கழித்து அதே சம்பவத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தால் அது நமக்கு ஒரு படிப்பினையாகத்தான் தோன்றும். அதைத் தொடர்ந்து நடந்த பல அம்சங்களுடன் சேர்த்துப் பார்க்கும்போது உண்மையில் அது நன்றாகவே அமைந்தது என்றுகூடத் தோன்றலாம்.

ஆங்கிலத்தில், "Looking at the bigger picture" எனக் கூறுவார்கள்.

நாம் எடுத்த முடிவுகள் ஒரு புறம் இருக்க நாம் சில வேளைகளில் ஒன்றைப் பற்றி முடிவெடுக்காமலோ ஒன்றைச் சொல்லாமலோ இருந்திருப்போம் அல்லது செய்யாமல் விட்டிருப்போம். அவை  இன்னும் பெரிய வருத்தங்களுக்கு இட்டுச்சென்றிருந்திருக்கலாம்.

ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டாலோ  ஒன்றைச் செய்யாமல் இருந்தாலோ அதைப் பற்றிய எண்ணம் மனத்தில் ஓடிக்கொண்டே இருக்கும். அதைச் செய்துபார்ப்பதற்கு ஏற்பட்ட பயத்தைவிட அதைச் செய்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற ஏக்கம் பெரியதாக இருக்கும். ஆக அதிகமாக என்ன ஆகியிருக்கும்? , நிராகரிக்கப்பட்டிருப்போம். நமக்கு ஏற்பட்ட  வருத்தத்தைவிட நம்மால் சமாளிக்கக்கூடிய ஒன்றாகவே அது இருந்திருக்கும்.

நமது செயல்களுக்கும் செயல்படாமல் இருந்ததற்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தாலும், அதன் இறுதியில் நாம் வருத்தப்படக்கூடாது.


Top