பேசுவோமா

Images
  • Courtesy
    (படம்: Pixabay)

கனிவன்பைப் பாராட்டுவோம்

விடுமுறை முடிந்தது...

சாங்கி விமான நிலையத்துக்கு வந்தாகிவிட்டது. இருவார விடுமுறை இனிமையாக முடிந்த மனநிறைவு ஒருபுறம். வீடு, அலுவலகம், பிள்ளைகளின் பள்ளி என்று அழுத்தும் பொறுப்புகள் மறுபுறம்.
கணவரும் மகனும் ஒரு டாக்சியில். நானும் என் மகளும் மற்றொரு டாக்சியில்.


என்னை ஒதுங்கச் சொல்லிவிட்டுப் பெட்டிகள் அனைத்தையும் ஓட்டுநரே வண்டியில் ஏற்றினார். அவர் வயதானவர். எனக்குச் சங்கடமாக இருந்தது. கைகொடுக்கச் சென்ற என்னை, வேண்டாம் என்று மறுத்து, அன்புடன் உள்ளே சென்று உட்காரச் சொன்னார்.


எவ்வளவு நாள் விடுமுறை என்று கேட்டார். இருவாரம் என்றேன். உடனே வானொலியை ‘ஒலி 96.8’க்கு மாற்றினார். அவர் ஒரு சீனர்.


‘இரு வாரங்களாகத் தமிழ் அதிகம் கேட்டிருக்கமாட்டீர்கள். இது இனிமையாக இருக்கும்.’ என்றார்.


வழியில் என் மகளிடம் மிகவும் அன்பாகப் பேசினார். நன்றாகப் படிப்பது அவசியம் என்பதை எடுத்துச் சொன்னார்; இப்படி விடுமுறையின்போது வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதத்தில் நடந்துகொள்ளவேண்டும் என்றார். எரிச்சலூட்டும் அளவு பேசவில்லை... அளவாக, கனிவாகப் பேசினார்.


இறங்கியபோதும், பெட்டிகளை இறக்குவதற்கு உதவி செய்தார். ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினார்.


வீட்டுக்கு வந்ததும், முதல் வேலையாக அவரது சேவை நிறுவனத்தின் செயலிக்குச் சென்று கருத்துத் தெரிவிக்கும் பகுதியில், அவரின் சேவையைப் பாராட்டி எழுதினேன்.


அவர் சேவை வழங்கினார்; அந்தச் சேவையை நான் பெற்றுக்கொண்டேன். அது நீடித்தது என்னவோ 25 நிமிடம் மட்டுமே. ஆனால் அது அளித்த நிறைவு....


அன்று எனது நாள் மிகவும் இனிமையாக இருந்தது. களைப்பின்றி, சுறுசுறுப்பாகப் பல்வேறு வேலைகளைச் செய்தேன். அது தற்செயலாகக்கூட அப்படி அமைந்திருக்கலாம். ஓட்டுநரின் சேவைக்கும் அதற்கும் தொடர்பு இல்லாமலும் இருந்திருக்கலாம்.


ஆனால் ‘Positive Vibes’ என்று கூறுவார்களே.. அதை அவர் அதிகாலைப் பொழுதில் எனக்குள் ஏற்படுத்தினார் என்று தோன்றியது.
அறிமுகமில்லாத ஒருவர் நம்முடன் நேர்மறையாக, அக்கறையாகப் பேசியதும், நடந்துகொண்டதும் ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


சிலர் அத்தகைய சேவைகளை ‘விற்பனை உத்தி’ என்று கூறியும் கேட்டிருக்கிறேன்.


இதில் அதற்குச் சாத்தியமில்லை.


அப்படியே இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப்போகட்டுமே!
வாழ்க்கையில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவும், நின்று நிதானமாய் அன்பான இரு வார்த்தைகள் பேசவும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும்கூட நேரமில்லை. யார் உண்மையாக நம்மீது அக்கறையோடு பேசுகிறார்கள் என்று நம்மால் உறுதியாகக் கூறிவிடமுடியுமா என்ன?


நாம் ஏதோ ஒரு சேவையை வழங்குபவராகவும் இருப்போம். பெற்றுக்கொள்பவராகவும் இருப்போம். அது ஒரு தற்காலிக உறவு. அதைச் சிடுசிடுப்புடனும் வழங்கலாம்; அன்புடனும் வழங்கலாம்.

அது நமது தெரிவு. எரிச்சலுடன் ஒரு சேவை வழங்கப்பட்டாலும், அதைப் பற்றி நம்மில் பலர் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அடுத்த முறை மாற்றுச் சேவையை நாடுவோம். அவ்வளவுதான்!


ஆனால் சேவையை அன்பாக வழங்கும்போது, சேவையைப் பெறுபவரின் நாளில், அவர் அடுத்தடுத்துச் செய்யும் வேலைகளில் அது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். நேர்மறையான பல்வேறு எண்ணங்களைக் கொண்டுவரும்.


ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும்... கட்டாயம் இருக்கும். சேவைத் துறைக்கு ‘கனிவன்பே’ அடிப்படை என்று அடித்துக்கூறுவேன்.


நல்ல சேவையை நேரடியாகப் பெறும்போது அதை இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இன்றைய உலகில் அது நிச்சயம் இயல்பல்ல, கிடைத்தற்கரிய ஒன்று என்று கூறுவேன். சேவை வழங்குபவரை வாயாரப் பாராட்டுங்கள்... நன்றி கூறுங்கள்.... மேலும் பலரிடம் நேர்மறை எண்ணத்தை விதைக்க அது அவரை ஊக்குவிக்கலாம்.


மீண்டும் பேசுவோம்!

அன்புடன்,
மீனா ஆறுமுகம் 

Top