பேசுவோமா

Images
  • not happy
    (படம்: Unsplash

மனச்சிறை

குளிக்கும்போது சோப் முடிந்துவிட்டால் என்ன செய்வது?

சமைக்கும்போது எண்ணெய் முடிந்துவிட்டால் என்ன செய்வது?

இதெல்லாம் ஒரு பிரச்சினையா, முன்கூட்டியே பொருள்களை வாங்கிவைத்துவிட்டால் போகிறது என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் இத்தகைய எண்ணங்கள் சிலரை முடக்கிப்போட்டுவிடுகின்றன.

ஒரு தடவையல்ல. மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் வரும்போது அதிலிருந்து மீள முடியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.

வேறு எதையும் செய்யத் தோன்றாமல் சோர்ந்துவிடுகிறார்கள்.

வேலை, படிப்பு, விளையாட்டு, குடும்பம் எதிலும் நாட்டமில்லாமல் போய்விடுகிறது.

வெளியே செல்லவோ, நண்பர்களைப் பார்க்கவோ, நல்ல உணவை உண்ணவோகூட விரும்பமாட்டார்கள்.

அவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய்விடுகிறது.


இந்தச் சுழலில் சிக்கிக்கொள்வது அவர்கள் மட்டுமல்ல. சுற்றியிருக்கும் குடும்பத்தினரும் நண்பர்களும்தான். அவர்களுக்கு என்னவாயிற்று, எப்படி அவர்களைக் கைதூக்கிவிடுவது என்று தெரியாமல் தடுமாறுகின்றனர்.

இதில் கொடுமை என்னவென்றால் சுற்றிச் சுழலும் எண்ணங்களால் பாதிக்கப்படுவோர் கற்பனை உலகில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான்.

பொருள் வைத்த இடத்தில் அப்படியே இருக்கும். ஆனால் அது முடியப்போகிறதோ குறையப்போகிறதோ என்று நினைத்து மீண்டும் மீண்டும் அதே பொருளை வாங்க நினைப்பார்கள்.

அதற்கென நினைவூட்டல்களைத் தாளில் எழுதிச் சுவரில் ஒட்டிய வண்ணம் இருப்பார்கள்.

இதனைப் பார்க்கும்போது சுற்றியிருப்பவர்களுக்கு விரக்தியும் கோபமும் வருவது இயல்பு.

ஆனால் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமாக எப்படி அவர்களை இந்தச் சிறையிலிருந்து மீட்பது என்று யோசிக்க வேண்டும்.

சிறுவயதில் அல்லது பள்ளி நாட்களிலேயேகூட அவர்கள் இத்தகைய அறிகுறிகளை வெளிப்படுத்தியிருக்கலாம்.

தேர்வு நெருங்கும்போது பாடக் குறிப்புகளை உள்ளங்கையில் மீண்டும் மீண்டும் எழுதியிருக்கலாம். அதைப் புறந்தள்ளிவிடாமல் அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளைக் கூறி, அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கவேண்டும்.

அவர்களின் மனநலம் மேம்பட அது பெரிதும் உதவலாம். மனநலம் என்பது அனைத்துச் சொத்துகளையும்விடப் பெரியது.

மனம் பேதலித்தால் மற்ற அனைத்துப் பிணிகளையும்விட அது கொடியது. பாதிக்கப்பட்டவர்கள் படும் பாடு அவர்களுக்குத்தான் தெரியும்.


OCD என்ற மீண்டும் மீண்டும் ஒரே செயலை அல்லது ஒரே எண்ணத்தைப் பற்றியே அசைபோடும் நிலை மனநலப் பிரச்சினையின் ஒரு பரிமாணம்தான். அதுவே இன்னும் கடுமையான நிலைகளுக்கு இட்டுச் செல்லலாம்.

மனச்சோர்வு ஏற்பட்டுவிட்டால் அதிலிருந்து மீள்வது சாதாரணமன்று. தற்கொலை எண்ணத்துக்கும் அது வழிவிடலாம். அத்தகைய விபரீதம் நிகழ்ந்தால் ஒட்டுமொத்தக் குடும்பமும் கரைசேர முடியாமல் தத்தளிக்கும் நிலை ஏற்படலாம்.

மனநலம் பற்றிப் பேசுவதுகூடத் தவறு. அத்தகைய பிரச்சினை உள்ளவர்களைச் சமுதாயம் ஒதுக்கிவைத்துவிடும் என்று கருதுவது அந்தக் காலம்.

இன்றைய போட்டிமிகுந்த நவீனச் சூழலில் மனநலத்தைப் பார்த்துக்கொள்ள அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. அதற்கான விளம்பர இயக்கங்களும் அவ்வப்போது நடத்தப்படுகின்றன.

அதனால் மனநலப் பிரச்சினைக்குத் தகுந்த ஆலோசனை அல்லது மருத்துவ உதவியை நாடுவதில் தவறேயில்லை. எவ்வளவு விரைவாக அதைச் செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.


பிரச்சினைக்கு என்ன காரணம்? குடும்பமா, வேலையா சிறுவயதில் நடந்த ஏதோவொரு சம்பவமா என்பதை ஆலோசிக்கலாம்.

இது யாருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான்.

குறிப்பிட்ட மருந்தைத் தொடர்ந்து உட்கொண்டால் நினைவுகளைச் சீராக வைத்து இயல்பு வாழ்க்கையைத் தொடர முடியும் என்று மருத்துவர் நம்பிக்கை தரலாம்.

அது சாத்தியமாக வேண்டுமென்றால், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவும் பொறுமையும் புரிந்துணர்வும் மிக மிக முக்கியம்.

குடும்பமாக அமர்ந்து பேசுவது, உணவு உண்பது, வெளியே செல்வது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது.

இவை ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள, ஒருவர் மற்றவர் நலன் மீது அக்கறை கொள்ள, பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும்.

பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு அவற்றைத் தீர்க்க முயற்சி எடுப்பது முக்கியம்.

பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுத்து அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது அவசியம். அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட நாம் உதவவேண்டும்.

மனநலத்தைப் பற்றிப் பேசுவோம். நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வோம். சீர்மிகுந்த சமூகத்தை உருவாக்குவோம்.

மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
இரா. நடராசன்.
  

Top