பேசுவோமா

Images
  • sikkim

நமக்கு எது சொந்தம்?

இளமைப் பருவத்தில் எண்ணற்ற கனவுகள் இருக்கும். எதை எதையோ சாதிக்கத் தோன்றும் . இயன்ற அளவு பணம் சம்பாதித்து இன்பமாக வாழவேண்டும் என்று ஆசை வரும்.
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட சமூகம் ஒன்று இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் இருக்கிறது.
நேப்பாளம், சீனா, பூட்டான் ஆகிய 3 நாடுகளை எல்லையாகக் கொண்டது இந்தியாவின் சிக்கிம் மாநிலம்.
அழகிய மலைப் பிரதேசம்.
இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த ஒன்று.


அமைதியும் எளிமையும் இவர்களின் அடையாளங்கள்.
இங்கு 200க்கு மேற்பட்ட பௌத்த மடாலயங்கள் உள்ளன.
அவற்றுள் சில அடர்ந்த காடுகளுக்குள், மிகப் பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றன.
இளம் வயது ஆண்பிள்ளைகள் பௌத்த துறவியாவதற்கு மடாலயங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
முதிய பௌத்த துறவிகள், சில காரணங்களின் அடிப்படையில் சிறுவர்களைத் தேர்ந்தெடுப்பார்களாம்.
பின்னர் அவர்களின் முகவரிகளைக் கண்டுபிடித்து வீடுகளுக்கே சென்று, பெற்றோரிடம் பிள்ளைகளைத் தங்களுடன் அனுப்பி வைக்கும்படிக் கேட்பார்களாம்.
பெற்றோரைப் பொறுத்தவரையில் இது பெரும் பாக்கியம்.
துறவறம் பூணுவதற்கான அழைப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை.


அப்படிக் கிடைத்தால் அதைவிடப் பேரின்பம் எதுவும் இல்லையாம்.
இந்த நவீன யுகத்தில் இப்படியும் ஒரு சமூகம் இருக்கிறது.
இவர்களைப் பொறுத்தவரையில் பொன் பொருளில் இல்லாத நிம்மதி, பிள்ளைகளைத் துறவறத்திற்கு அனுப்புவதில் இருக்கிறது.
உல்லாசப் பயணமாக ஊரைச் சுற்றிப்பார்க்கச் சென்ற எனக்குக் கேள்வி மேல் கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்றியது.
ஏன் இப்படி வாழ்கிறார்கள்? சாதாரண மக்களுக்கு இருக்கும் ஆசைகள் இவர்களுக்கு இல்லையா?
எங்களது வாகனத்தை ஓட்டியவர் பதில் அளித்தார்.
அவர் பெயர் துருவா. நேப்பாளத்தைச் சேர்ந்தவர். வயது 40 இருக்கும்.
அவருக்கு ஒரே பெண் குழந்தை.
பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற பிள்ளைக்குப் பத்து வயது ஆனபோது, துறவிகள் அவர் வீட்டைத் தேடி வந்தனர்.
துறவறத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்க, இவர் சற்றும் தயங்காமல் தன்
செல்ல மகளைக் கொடுத்துவிட்டார். அதன் பிறகு மகளைப் பார்க்கவே இல்லையாம்.
புன்னகை பூத்தவாறு மிகச் சாதாரணமாகப் பேசினார்.
என்னால் நம்ப முடியவில்லை. வேடிக்கையாகச் சொல்கிறார் என்று நினைத்தேன்.
மீண்டும் மீண்டும் அவரிடம், உண்மையிலேயே இப்படிச் செய்தீர்களா என்று கேட்டேன்.


‘இதைச் செய்ய எப்படி மனம் வந்தது? பார்க்காமல் எப்படி இருக்க முடிகிறது?’ என்று நான் கேட்டபோது, ‘எதுவுமே நமக்குச் சொந்தமில்லை. என்றேனும் ஒருநாள் இருப்பதையெல்லாம் இழக்கத்தான் வேண்டும். இதை உணர்ந்தால் போதும். மனம் தெளிவுபெறும். ஆசைகள் அடங்கும் என்றார்.
என் உள்ளத்தில் துருவா உயர்ந்து நின்றார்.
வாழ்க்கைக்குப் புது அர்த்தம் கிடைத்தது.

அன்புடன்
பவளகாந்தம் அழகர்சாமி
 

Top