பேசுவோமா

Images
  • Padang
    படம்: Facebook/Grace Fu

ஏதோ நினைவுகள்...

தேசிய தின அணிவகுப்பை முதல் முறையாக நான் பார்த்தது நேரடியாக அல்ல. கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்தான்.

அணிவகுப்பின் பிரமாண்டமான காட்சிகள் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தின. அப்போது தொடங்கிய அணிவகுப்பின் மீதான எனது மோகம் இன்றும் தொடர்கிறது.


Our Singapore எனும் இவ்வாண்டின் தேசிய தினக் கருப்பாடல் என்னைப் பள்ளிப் பருவத்திற்குக் கொண்டுசெல்கிறது.

1984இல் “Stand Up for Singapore” எனும் முதல் தேசிய தினக் கருப்பாடல் இயற்றப்பட்டது. சிங்கப்பூரின் 25 ஆண்டு காலத் தன்னாட்சியை அனுசரிப்பதற்கு.

தொடக்கநிலை 4இலிருந்து 6 வரையுள்ள மாணவர்களுக்கு அந்தப் பாடலின் வரிகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. பள்ளிகளில் அதை மாணவர்கள் பாடுவதும் படம்பிடிக்கப்பட்டது.

என் பள்ளியிலும் படப்பிடிப்பு நடந்தது. பள்ளித் திடலில் பல மணி நேரம் படப்பிடிப்புக்காக மீண்டும் மீண்டும் பாடலைப் பாடியது ஞாபகம் வருகிறது. அப்போது களைப்பு ஏதும் தோன்றவில்லை.


தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கருப்பாடலின் ஓர் அங்கமாக அந்தப் படப்பிடிப்பு அமைந்தது.

நான் நேரடியாக தேசிய தின அணிவகுப்பைப் பார்த்தது 2001இல். என் மூத்த மகளுக்கு அப்போது ஒரு வயது. தேசிய விளையாட்டரங்கில் அவளுடனும் என் இரு அக்காக்களுடனும் அவர்களின் மகள்களுடனும் அணிவகுப்பை ரசித்தேன்.

அடுத்த முறை, ஒரு வானொலிச் செய்தியாளராக அணிவகுப்பைக் காண்பேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 2006ஆம் ஆண்டு, பழைய தேசிய விளையாட்டரங்கு இடிக்கப்படுவதற்கு முன், கடைசியாக அங்கு நடைபெற்ற அணிவகுப்பு அது. அணிவகுப்புப் பற்றி ஒலி 96.8 செய்திக்காக நேரடியாக விவரங்களைத் தொகுத்து வழங்கினேன்.


அடுத்த ஆண்டு, தேசிய தின அணிவகுப்புக்கான தொலைக்காட்சித் தமிழ் வருணனையைத் திரு. S. பீட்டருடன் படைப்பதற்கு ஒரு வாய்ப்பு. மிதக்கும் மேடையில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் அணிவகுப்பு அது. புதிய இடம், வித்தியாசமான அங்கங்கள் என்பதால் வருணனை செய்வதில் பல சவால்கள். நிலம், கடல், ஆகாயம் அனைத்திலும் முதல் முறையாக மாறுபட்ட சாகசங்கள்.


பல ஒத்திகைகள். ஆனால், National Education Show எனும் தேசியக் கல்வி  அங்கம் என் மனத்தில் நீங்காமல் இடம்பிடித்தது. அந்த ஒத்திகைகளில் தொடக்கநிலை 5ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டார்கள். ஒவ்வோர் அங்கத்தையும் அவர்கள் ரசித்த விதம், எழுப்பிய ஆரவாரம் என் கண்ணில் இன்னும் நிழலாடுகிறது. அவர்களின் உற்சாகம், வருணனை செய்யும் எங்களின் குரல்களிலும் எதிரொலித்தது.


அணிவகுப்பின்போது, சினூக் வகை (Chinook) ஹெலிகாப்டர் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் காட்சி எப்போதுமே வார்த்தைக்குள் அடங்காத ஓர் உணர்வை எனக்குள் ஏற்படுத்தும். கண்கள் சற்றுக் கலங்கும். அந்த அங்கத்தின்போது எழுந்து நின்று, தேசிய கீதத்தைப் பாடுவேன்.

நானும் என் குடும்பமும் நியூஸிலந்தில் சில காலம் வசித்தோம். அப்போதுகூட இணையம்வழி அணிவகுப்பைக் காணத் தவறியதில்லை. சிங்கப்பூரின் பொன்விழா அணிவகுப்பை நேரடியாக காண்பதற்காக முன்கூட்டியே நியூஸிலந்திலிருந்து நாங்கள் சிங்கப்பூர் திரும்பினோம்.

2016இல் புதிய தேசிய விளையாட்டரங்கில் முதல் முறையாக அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது தொலைக்காட்சிச் செய்தியாளராக அதுபற்றிய விவரங்களைத் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.


இவ்வாண்டின் அணிவகுப்பு இருநூறாம் ஆண்டு நிறைவை அனுசரிக்கும் வகையில் அமையவுள்ளது. அதுவும் என் நினைவில் நீடிக்கும் ஒரு நிகழ்வாக அமையும் என்பது நிச்சயம்.

 

 


Top