பேசுவோமா

Images
  • m2
    படங்கள்: PIXABAY

தம்பி! உனக்கு எப்போது திருமணம்?

‘தம்பி! உனக்கு எப்ப திருமணம்?’
கடந்த ஓர் ஆண்டாக என்னை அதிகம் பாதித்த கேள்வி இதுதான்.

குறைந்தது 100 பேராவது இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருப்பார்கள்.

திருமணக் கொண்டாட்டம் முதல், கோவில் பூசை, பண்டிகை நாள்கள் வரை, வெளியில் எங்கேயாவது யாரையாவது எதிர்பாராதவிதமாக நீண்ட நாள்களுக்குப் பிறகு பார்க்கும்போது இந்தக் கேள்வி கண்டிப்பாக என்னைப் பார்த்துக் கேட்கப்படும்.

குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்ல, நண்பர்களும் அவ்வப்போது இந்தக் கேள்வியை என்னிடம் முன்வைப்பார்கள்.

ஐயோ! எனக்கு ஒன்றும் அவ்வளவு வயதாகவில்லை, வெறும் 26தான், என்று விளையாட்டாகச் சொல்லி அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிடுவேன்.


ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தக் கேள்வியை என்னையே நான் கேட்கத் தொடங்கிவிட்டேன்.
அதன் விளைவு... வாழ்க்கை மீது பெரிய பயம் உருவானதுதான் மிச்சம்.

என்ன செய்வது என்று புரியாமல், சில நண்பர்களுடன் நான் இதைப் பற்றிப் பேசினேன்.

பிறகுதான் தெரிந்தது, இந்தக் கேள்வி எல்லா இளையர்களையும் பாதித்துள்ளது என்று.
அதுவும் 25 வயதைத் தாண்டிய பெண் என்றால் இன்னும் நெருக்கடி அதிகம்.

நெருக்கடிக்கு ஆளாவது இளையர்கள் மட்டும் அல்ல அவர்களின் பெற்றோரும்தான்…

அண்டைவீட்டார், அலுவலக நண்பர்கள், குடும்பத்தினர், குடும்ப நிகழ்ச்சிகளின்போது பெற்றோரைப் பார்த்தும் இந்தக் கேள்வியைக் கேட்டு அவர்கள் நிம்மதியையும் குலைத்துவிடுகிறார்கள்.


அட இதாவது பரவாயில்லை.. ஊரில் வேலை வெட்டி இல்லாத சிலர் திருமணமாகாதவர்களைப் பார்த்து பல வதந்திகளைப் பரப்பத் தொடங்குவர்.

உதாரணத்துக்கு இப்படிச் சில...

•அந்தப் பையன் ஏற்கெனவே காதல் திருமணம் செய்துவிட்டான், அவன் பெற்றோர் அதற்குச் சம்மதிக்கவில்லை என்பதால்தான் இப்படி உள்ளான்.

•அந்தப் பெண்ணின் குணம் சரியில்லை. அதனால்தான் யாரும் திருமணம் செய்ய முன்வருவதில்லை.

•அவன்/அவள் தகாத உறவில் ஈடுபடுபவன்/ள். அதனால்தான் இன்னொரு பெண்ணை/ஆணைக் கல்யாணம் செய்துகொள்வதை, வேண்டாம் என்றுகூறி தவிர்க்கிறான்/ள்.

ஆஹா... என்ன நல்ல உள்ளம் கொண்டவர்கள் அத்தகையவர்கள்…

சரி இந்தக் கேள்விக்கு எப்படியாவது பதில் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆராயத் தொடங்கினேன், காதல் திருமணம் செய்தவர்கள், வீட்டில் பார்த்துக் கல்யாணம் செய்தவர்கள், முதியவர்கள் எனப் பலரிடம் பேசினேன்.

இறுதியில் பதில் கிடைத்தது.


எல்லோரும் முன்வைத்த கருத்து “நீ எப்போது தயாராகிறாயோ அப்போது செய்துகொள்”.

மற்றவர்களுக்காகப் பயந்து ஒரு பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு இறுதியில் வேண்டா வெறுப்பாக வாழ்வது நமக்கு நாமே ஒரு பெரிய குழியைத் தோண்டிக்கொள்வதற்குச் சமம். அதற்காகக் காதல் திருமணம்தான் செய்யவேண்டும் என்றல்ல…

சரி நாம் எப்போது கல்யாணத்திற்குத் தயாராகிறோம் ?

போட்டி அதிகமுள்ள இன்றையச் சூழலில் நல்ல வேலை கிடைப்பது என்பது சாதாரணமானது அல்ல. அதனால் நமக்குப் பிடித்தமான துறையில் வேலையைத் தொடங்க வேண்டும். அதில் குறைந்தது 3 ஆண்டாவது வேலை செய்து முன்னேற்றம் காணவேண்டும்.

பணக்காரக் குடும்பப் பின்னணியால் மட்டும் ஒருவருக்கு நல்ல திருமணம் அமைந்துவிடாது. சுய ஒழுக்கம், சீரான சிந்தனை, முக்கியமாக Practical mindset இதுபோன்ற அம்சங்களும் முக்கியம்.

இந்த உலகத்தில் நம்மைத் தவிர வேறு யாரும் நம்மை அதிக அளவில் காதலிக்கப்போவதில்லை. அதனால் நம் மனத்திற்குத் தெரியும் எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது. சிலமுறை அது தவறாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் நம் பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசினால் அதற்கு நல்ல பதில் கிடைப்பது உறுதி.


என்ன செய்யக்கூடாது ?

•நான் தயாராகவில்லை, தயாராகவில்லை என்ற மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

•நம்மை எப்படி பல பேர் திருமணம் பற்றிக் கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தினார்களோ, அப்படி நாம் மற்றவர்களுக்குச் செய்யக்கூடாது.

•சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் திருமணம் செய்துவிட்டார்கள், அதற்காகவாது நாம் செய்ய வேண்டும் என்பது தவறான முடிவு.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் ஆசை இருக்கும், அதனால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்களை விட்டுவிடுவது நல்லது.

ஏனென்றால் அடுத்த 40 , 50 ஆண்டு வாழ்க்கையை அவர்கள்தான் வாழப்போகிறார்கள், நாம் இல்லை.

அதனால் முடிவு அவர்களுடையதாக இருக்கட்டும். வேண்டுமென்றால் அச்சம் ஏற்படுத்தாமல் சில ஆலோசனைகள் கூறலாம்.

தெளிவாக அமைதியாக ஓர் இடத்தில் அமர்ந்து நம்மை நாமே கேட்டுக்கொண்டு முடிவெடுப்பது சாலச் சிறந்தது.

அவசரம் வேண்டாம், அச்சம் வேண்டாம்...
வாழத்தானே வாழ்க்கை…

என்றும் அன்புடன்
வினோத் கருப்பையா


 

Top