பேசுவோமா

Images
  • clocks
    (படம்: Pexels)

காலம் நம் கைகளில்...

கண்மூடிக் கண் திறப்பதற்குள் ஓராண்டு உருண்டோடிவிட்டது.

இவ்வாண்டின் தொடக்கத்தில், நம்மில் பலர், பலவற்றைச் செய்துமுடிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருப்போம். அதற்காகத் திட்டங்களையும் வகுத்திருப்போம். அவற்றை நிறைவேற்ற முயற்சிகளையும் ஆரம்பத்தில் உத்வேகத்துடன் எடுத்திருப்போம். 

காலப்போக்கில் அந்த உற்சாகம் குறைந்து, அதற்காகப் போதுமான நேரத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம். அதுபோன்ற வேளைகளில் அலுத்துக்கொண்டே ‘நேரமே இல்லை!’ என்று கூறுவது வாடிக்கையாகியிருக்கலாம். அது ஒரு வகையான சாக்குப்போக்கு என்றுதான் கூறவேண்டும்.

ஒரு நாளில் 60 மணி நேரம் இருந்தாலும் நம்மில் பலர் அதே பல்லவியைத்தான் பாடியிருப்போம்.

கார் ஓட்டுவதற்கான உரிமம் பெறவேண்டும் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் தீர்மானம் எடுத்திருந்தேன். வாகனம் ஓட்டுவதற்குப் பயிற்சியளிக்கும் புக்கிட் பாத்தோக் நிலையத்திற்குச் சென்று வகுப்புகளை உற்சாகத்துடன் எடுத்துவந்தேன்.

மொத்தம் 5 நிலைகளைக் கடந்த பின்னர்தான் தேர்விற்கு அமர முடியும். ஒவ்வொரு நிலையிலும் சில வகுப்புகளைப் பூர்த்திசெய்த பிறகுதான், அடுத்த நிலைக்குச் செல்ல முடியும். 4 நிலைகளைக் கடந்த பின்னர், அதிலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியது.

மேற்கொண்டு வகுப்பிற்குச் செல்லவும் நேரத்தை நான் ஒதுக்கவில்லை. அடுத்த ஆண்டிலாவது கார் ஓட்டுவதற்குரிய உரிமத்தைப் பெற்றே தீரவேண்டும் என்று இப்போது கங்கணம் கட்டியுள்ளேன். அதற்கான நேரத்தையும் ஒதுக்கத் திட்டமிட்டுள்ளேன்.

பம்பரம் போல சுழலும் வாழ்க்கையில் நேரம் போவதே தெரியவில்லை என்று கூறுவது உண்மைதான். ஆனால் நேரத்தை நாம் நிர்வாகம் செய்கிறோமா நேரம் நம்மை நிர்வாகம் செய்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் பொதுவான ஒன்று என்று பார்த்தால், அது நேரம்தான். 24 மணி நேரம் சரிசமமாக எந்த ஒரு பேதமுமின்றி நம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. என்னென்ன நடவடிக்கைகளைச் செய்துமுடிக்க வேண்டும் என்று பட்டியலிட்டு, அவற்றுக்குரிய நேரத்தைத் திட்டமிட்டு ஒதுக்கினால், ‘நேரமே இல்லை!’ என்ற பல்லவி பொய்யாகிவிடும். 24 மணி நேரம் போதுமானதாய் இருக்கும். திட்டமிட்டவற்றைச் செய்துமுடித்தால், மனநிறைவும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

இன்னும் இரண்டு நாளில் புத்தாண்டு பிறந்துவிடும். புதிய ஆண்டில் பலவற்றைச் சாதிக்க வேண்டும் என்ற கனவு நமக்குள் இருக்கும்.
அந்தக் கனவு காலப்போக்கில் கரைந்து கானல் நீராகிவிடாமல் பார்த்துக்கொள்வது நம் கைகளில்தான் உள்ளது. நமக்கு இருக்கும் பொன்னான நேரத்தில் அடங்கியுள்ளது!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

- நித்திஷ் செந்தூர்
 

Top