Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

வார்த்தைகளின் வலிமை

சொல் மந்திரம். எத்தனை முறை அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறோம்? 

வாசிப்புநேரம் -
வார்த்தைகளின் வலிமை

(படம்: Pexels)

சொல் மந்திரம். எத்தனை முறை அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறோம்? சில வார்த்தைகள் ஆறுதலாக வந்துசேரும். சில வார்த்தைகள் நம்மைச் செதுக்கும். வேறு சில நம்மைப் புண்படுத்தவும் செய்கின்றன. சில வார்த்தைகள் வெல்லும். சில கொல்லும்.

தமிழில்தான் வார்த்தைகளை வருணிக்க எத்தனை எத்தனை பழமொழிகள்? கல்லடி பட்டாலும் சொல்லடி படக்கூடாது;

நாக்கு மேல் பல்லைப் போட்டுப் பேசுகிறார்; உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது... என அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அத்தனையும் வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகத்தான் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

கோபத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ஆறாத ரணத்தை ஏற்படுத்தும். ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையால் அந்த ரணமும் காலப்போக்கில் ஆறிப்போகும்.

யதார்த்தம் என்னவெனில் வார்த்தைகளைப் பலருக்கும் சரியாகக் கையாளத் தெரிவதில்லை. வார்த்தைகள் நம் குணத்தை வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

உண்மையான அக்கறை உள்ளவர்களிடமிருந்து வரும் வார்த்தைகள் கேட்பதற்குக் கண்டிப்பாக இருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் நம்மை நன்றி சொல்லவைக்கும். நம் அறியாமையைத் தெளியவைக்கும். அவை புத்தி புகட்டி ஞானத்தின் அடுத்த கட்டத்திற்கு நம்மைக் கொண்டுசெல்லும்.

கணிதப் பாடத்தில் படுதோல்வி அடைந்த என்னை இறுதியாண்டுத் தேர்வில் 90க்கும் மேல் மதிப்பெண்களைப் பெறவைத்தன என் நண்பன் கூறிய வசைச் சொற்கள். அன்று அவன் வைதிருக்காவிட்டால் இன்று எனக்கு ஏது பட்டக்கல்வி?

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அடுத்தவர்களின் நிலையைப் புரிந்து பேசுவதே இல்லை. அவர்களின் வார்த்தைகள் பெரும்பாலும் ‘நான்’ என்ற அகந்தையை வெளிப்படுத்துபவையாக இருக்கும்.

புதியவற்றைக் கற்றுக்கொள்ள விரும்பாதவர்களின் வார்த்தைகள் வேறு மாதிரியானவை. பிறர் கூறுவதை ஏற்றுக்கொள்ளாமல் தான் சொல்வது மட்டும்தான் சரி, தனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல இருக்கும் அவர்களின் உரையாடல்கள். கூர்ந்து கவனித்தால் ஒரு கருத்தைச் சொல்லும்போது அதை அவர்கள் ஒத்துக்கொள்வதே கிடையாது. ‘ஆமாம் நீங்கள் சொல்வதும் சரிதான்’ என்ற வார்த்தைகள் அவர்களின் வாயிலிருந்து வருவதில்லை. அதற்கு பதிலாக எடுத்த எடுப்பிலேயே ‘அப்படி இல்லை’ என்று அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

எல்லா நேரமும் நம்மால் கனிவாகப் பேச முடியுமா என்றால் சிரமம்தான். ஆனால் கூடுமானவரை யோசித்துப் பேசலாமே...

வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்பதை இந்தப் பழமொழியைவிட மிகவும் துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. Think twice before you speak … பேசுவதற்கு முன் இருமுறை யோசிக்கவேண்டும்!

இதைப் பின்பற்றினாலே போதும் நாம் பயனுள்ள பல வார்த்தைகளைப் பேசிவிடலாம்...

நானும் இதில் தேறியவன் அல்லன். ஆனால் ஒவ்வொரு நாளும் முயல்கிறேன், அடுத்தவர்களைக் காயப்படுத்தாமல் வாழ.

அன்புடன் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்