பேசுவோமா

Images
  • pesu

பிறருக்காக வாழ்பவர்கள்

நம்மில் எத்தனை பேர் நமக்காக வாழ்கிறோம் ?

நான், எனது என்ற சுயநலத்தோடு வாழ்வதை நான் சொல்லவில்லை. பிறர் நலனுக்காகத் தம்மை ஓடாய்த் தேய்த்துக்கொண்டு உழைக்கும் உத்தமர்களையும் நான் குறிப்பிடவில்லை.

நம்முடைய உள்ளார்ந்த விருப்பத்துக்காக அன்றிப் பிறர் பார்வையில் மதிப்புடன் தென்பட வேண்டுமென்ற வறட்டு கௌரவத்துக்காக வாழ்வோரைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன்.

அண்மையில் தீபாவளியை ஒட்டி வசந்தத்தில் ஒளியேறிய ஒரு படத் துணுக்கு உங்களுக்கு நினைவிருக்கலாம்.

வெற்று ஆடம்பரத்துக்காகப் பெரும் செலவு செய்து தீபாவளிக்காக வீட்டை அலங்கரித்த ஒரு பெண்மணி அதில் காட்டப்பட்டிருப்பார்.

இப்படிப்பட்ட சிலரை நானும் சந்தித்திருக்கிறேன்.

இவர்களுக்கு எப்போதுமே மற்றவர்களின் விமர்சனம் பற்றியே அக்கறை.
அடுத்தவர் தம்மைப் பாராட்ட வேண்டும். தன்னைப் பெரிய ஆள் என்று நினைக்க வேண்டும்.
இதற்காக இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

தகுதிக்கு மீறிக் கடன் வாங்கி வசதி இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.

வீடு.. வீடு விட்டால் அலுவலகம். வேறெங்கும் செல்லாவிட்டாலும் ஒரு பெரிய கார் வேண்டும். அப்போதுதானே மதிப்பு ?

சின்னக் குடும்பத்துக்குக் கடல் மாதிரி ஒரு பெரிய வீடு வாங்குவார்கள். அந்த வீட்டுக்கான அடைமானக் கடனைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் உழைப்பதில் இவர்களுக்கு வருத்தமில்லை.


மிகப் பெரிய கடன் சுழலில் வலிந்து சிக்குவதால், நியாயமான சின்னச் சின்னச் செலவுகளைக் கண்டும் அஞ்சுவார்கள்.

ஐயா, உண்மையிலேயே உங்களுக்குச் சிறுவயதிலிருந்தே கார்களின் மீது மோகம் இருந்து அதை உங்களுக்கான உற்ற வசதியாகக் கருதினால் தாராளமாகக் கார் வாங்கிக்கொள்ளுங்கள்.

காற்றோட்டமான, வெளிச்சமான பெரிய வீட்டில் வசிப்பதுதான் உங்கள் கனவு என்றால் அதற்காக உழைத்துப் பாடுபட்டு அதை ஈட்டிக் கொள்வதிலும் தவறில்லைதான்.

ஆனால் இதுபோன்ற வசதிகளில் உண்மையான விருப்பமின்றி, அதை மிக மிகக் குறைவாகப் பயன்படுத்துவோர்கூட வெற்று ஆடம்பரத்துக்காக அதை வாங்க வேண்டுமா ?

மற்றவர்கள் நம்மை நம் நற்குணங்களுக்காக மதிக்கவேண்டுமே தவிர, நம்மிடம் உள்ள வசதியை வைத்து அல்ல.

அப்படிப்பட்ட வசதிகளை வைத்து நம்மை எடைபோடுபவரின் நட்பு நமக்கு ஒருபோதும் உதவியாக இருக்கப்போவதில்லை.

வசதிகளை விடுங்கள். கருத்துச் சொல்லும்போதுகூடத் தன்னுடைய உண்மையான உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தத் தயங்கும் சிலரை எனக்குத் தெரியும்.

மாற்றுக் கருத்துச் சொன்னால் எங்கே நம்மைத் தவறாகக் கருதுவார்களோ என்ற அச்சத்தில் எல்லாருக்கும் உகந்த ஒரு கருத்தையே முன்வைப்பார்கள்.

நாளடைவில் இது நம் மதிப்பைக் கீழிறக்கிவிடும் என்பதை இவர்கள் உணர்வதில்லை.

மாற்றுக் கருத்தையும் கண்ணியமான வகையில் தெளிவான வார்த்தைகளில் எடுத்துரைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் ?

எல்லா இடத்திலும் நாம் நாமாகவே இருப்பதுதான் மரியாதைக்குரியது.

இருப்பது ஒரு வாழ்க்கை. அதை நமக்காக வாழ்வோம்.

அன்புடன்
பொன். மகாலிங்கம் 


Top