பேசுவோமா

Images
  • littering
    (படம்: Toggle)

இயல்பாகட்டும் பொறுப்புணர்வு!

அண்மையில் சைனாடவுன் வட்டாரத்துக்குச் சென்றிருந்தபோது ‘டி-சட்டை’ ஒன்று கண்ணை உறுத்தியது. “Singapore – Fine City, ‘Fine’ City’“ என்று அதில் எழுதியிருந்தது.


சற்றுச் சங்கடமாக இருந்தது. ஆனால் யோசித்துப் பார்த்தால் உண்மைதான்!
சிறு சிறு தவறுகள் கண்டுபிடிக்கப்படும்போதெல்லாம் ‘Fine’ எனும் அபராதம் செலுத்தும் நிலையில்தான் இருக்கிறோம். அந்த வகையில் அதில் எழுதியிருப்பது சரிதானே என்று தோன்றியது.
மற்றொரு கோணத்தில் சிந்தித்தேன். ‘தவறு’ என்று ஒன்று நிகழும்போதுதானே ‘அபராதம்’ என்ற ஒன்றை விதிக்கவேண்டியிருக்கிறது; அது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தவேண்டியிருக்கிறது.


தண்டனையோ அபராதமோ கிடைத்துவிடுமே என்ற அச்சத்துடன் தவறு செய்யாமல் இருப்பதற்கும் தவறு செய்யக்கூடாது என்று மனத்தால் நினைத்து அதைச் செய்யாமல் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.


அண்மையில் நானும் என் குடும்பத்தினரும் ஐரோப்பிய நாடு ஒன்றுக்குச் சென்றிருந்தோம். பல்வேறு பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தினோம். பல பொது இடங்களுக்கும் சென்றோம். பொது இடங்களிலோ பொதுப் போக்குவரத்திலோ, எங்குமே, 'இங்கு சாப்பிடக்கூடாது', 'குப்பை போடக்கூடாது' என்ற வாசகங்கள் தென்படவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. ஆனால் குப்பைகளோ சிகரெட் துண்டுகளோ ‘Chewing Gum’ போன்றவையோ அதிகம் தென்படவில்லை.


ஒரு நாள் ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது ஒரு மூதாட்டியைக் கண்டேன். சிறுவன் ஒருவன், இனிப்பைச் சாப்பிட்டுவிட்டு எறிந்த காகித உரையை அந்த மூதாட்டி, மெல்ல நடந்துசென்று எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பினார்.


எனக்குச் சற்று அதிர்ச்சியாக இருந்தது. பொது இடங்களிலும் பொதுப் போக்குவரத்திலும் அபராதம் குறித்த பலகைகள் இல்லாததற்கும் குப்பைகள் அதிகம் வீசப்படாமல் இருப்பதற்கும் துப்புரவாளர்களைக் காணமுடியாததற்கும் காரணம் விளங்கியது.
'இது என் நாடு. இதைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் எனக்குப் பொறுப்பு இருக்கிறது' என்று அந்த மூதாட்டி கூறுவதுபோல் தோன்றியது.


ஒரு நாட்டைப் பொறுத்தவரை, அதைச் சுத்தமாக ஒழுங்காக மக்கள் வைத்துக்கொள்ளவில்லை என்றால், அபராதம் விதிப்பதைத் தவிர அரசாங்கத்துக்கு வேறு வழியில்லை.


சிங்கப்பூரில் மக்களின் சௌகரியத்துக்காக அறிமுகம் செய்யப்பட்ட பகிர்வுச் சைக்கிள்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். சைக்கிள்களை நிறுத்த உரிய இடமிருந்தும், அவை கேட்பாரற்றுக் கிடக்காத இடங்களே இல்லை எனலாம். ஆனால் உரிய இடத்தில் நிறுத்தாவிட்டால், அபராதம் என்று அறிவிக்கப்பட்டவுடன் அத்தகைய பொறுப்பற்ற செயல்கள் வெகுவாகக் குறைந்தன.


அபராதத்துக்குப் பயந்து ஒழுங்காய் நடந்துகொள்ளும் சமூகமாக நாம் எவ்வளவு நாள்கள் இருக்கப்போகிறோம்? அடுத்த தலைமுறைக்கும் இதையே சொல்லிக்கொடுத்துவிட்டுப் போகப்போகிறோமா? வீட்டுக்குள் யாரும் அபராதம் விதிப்பதில்லை. அதற்காக நடு வீட்டில் குப்பை போடுகிறோமா? நம் சொந்த சைக்கிளைப் பொறுப்பில்லாமல் வீசுவோமா?


'என் வீடு' என்ற உணர்வைப் போலவே 'என் நாடு' என்ற உணர்வும் நமக்குள் இருக்கவேண்டும் அல்லவா?


நம் சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடு. உலகே பார்த்து வியக்கும் வண்ணம் ஒவ்வொரு துறையிலும் உச்சத்தைத் தொடும் நாடு. நல்ல பக்குவமடைந்த மக்களைக் கொண்ட நாடு.
ஒரு சிறிய நாடாக இருந்துகொண்டு அளப்பரிய சாதனைகள் புரியும் நமக்கு, இந்த உணர்வை அடுத்த தலைமுறையிடம் விதைக்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது அல்லவா?


ஒழுங்கு எனும் உணர்வு, மனத்தில் வேரூன்றவேண்டும். 'சிறிய தவறுகளுக்கெல்லாம் இங்கு அபராதம் இல்லை; ஏனெனில் அப்படி நடப்பது மிகவும் அரிது' என்று நம் பிள்ளைகள் பெருமையாகச் சொல்லும் காலம் விரைவில் வரவேண்டும்.


அன்புடன்
மீனா ஆறுமுகம் 

Top