Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

காய்த்த மரம்

நண்பர்களுடன் அண்மையில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தைக் காணச்சென்றிருந்தேன்.

வாசிப்புநேரம் -
காய்த்த மரம்

(படம்: Pexels)

நண்பர்களுடன் அண்மையில் பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தைக் காணச்சென்றிருந்தேன்.

அவருடன் நடித்த சிலரும் சற்றுப் பிரபலமானவர்களே.

மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்குள் நுழைந்தது கூட்டம்.

நுழையும்போதே “தலைவா” என்ற கூப்பாடுகள் வேறு.

நடிகரின் பெயர் திரையில் தோன்றியதுமே, எழுந்த கரவொலிகளும் ஆரவாரங்களும் அடங்க ஒரு சில நிமிடங்கள் ஆயின.

சிலரோ, அவரைப் போல் இன்னொருவர் இல்லை எனப் புகழ்பாட, வேறு சிலரோ, “எல்லாம் நேரம், அதிர்ஷ்டம். இவரை விடத் திறமையானவர்கள் ஏராளம் உண்டு” எனக் கூறினர்.

நடிகரைப் பற்றி புகழ் பாடியவர்களை விட, அவரை விமர்சித்தவர்களின் பேச்சே என் மனத்தில் ரீங்காரமிட்டது.

ஒரு நபரின் வெற்றி பல்வேறு வகைகளில் பார்க்கப்படலாம்.

ஆனால் அந்த வெற்றி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதிக்கிறது.

சிலர் மற்றவரின் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.

சிலர் அடுத்தவரின் வெற்றியை உந்துதலாக எடுத்துக்கொண்டு, தன்முனைப்புடனும் உத்வேகத்துடனும் செயல்படத் தொடங்குகின்றனர்.

ஆனால் சிலர், அந்த வெற்றியில் குற்றம் கண்டுபிடிக்கின்றனர்.
பல போலிக் காரணங்களைச் சுட்டும் இவர்கள், ஏன் அந்த நபரின் உழைப்பைப் பற்றிச் சிந்திப்பதில்லை?

சுற்றுச்சூழலைக் குறைக்கூறுவதாலோ பிறரின் மீது நம் தோல்விக்கான பழியைச் சுமத்துவதாலோ தீர்வு கிடைத்துவிடுமா?

இன்று வெற்றியாளர்களாக உலா வரும் அனைவரின் பயணமும் உழைப்பும் பெரும்பாலும் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கும்.

இவர்களிடம் ஓர் ஒற்றுமை காணப்படும்.

அயராமல் உழைப்பது மட்டுமின்றி, தங்கள் துறையைப் பற்றி கற்றுக்கொள்வதிலும் இவர்களிடம் ஓர் அதீத ஆர்வம் காணப்படும்.
இதுதான் என்னுடைய வேலை நேரம்.

அதன் பிறகு எனக்கு அளிக்கப்படும் வேலைகளை நான் ஏன் உடனே செய்யவேண்டும்? “I have a life, you know” என்று வினவுவோர் இருக்கலாம்.

அது அவர்களின் எண்ணம். இவர்களின் மனப்போக்கோ வேறு மாதிரியாக இருக்கும்.

இவர்களுக்கு வேலை மீது தீராக் காதல். அதுவே இவர்களுக்கு வாழ்க்கையாக மாறிவிடுகிறது.

இவர்கள் கூடுதல் பொறுப்புகளைப் பாரமாகப் பார்க்கமாட்டார்கள். அவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக எடுத்துக்கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.

வாய்ப்புகள், தமக்கு அளிக்கப்படாமல் பிறருக்கு மட்டும் வழங்கப்படுகிறதே என்று மனத்துக்குள் பொருமமாட்டார்கள்.

வாய்ப்பளிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன திறமைகள் உள்ளன?
அவற்றை நாம் எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வெற்றிபெற்ற பிறகு அதைத் தக்கவைத்துக்கொள்வது ஒரு கலை.

காய்த்த மரம்தான் கல்லடி படும் என்ற பழமொழிக்கு ஏற்ப, ஒவ்வோர் அசைவையும் வார்த்தையையும் மிக கவனமாக எடுத்துவைக்க வேண்டியது இந்த நிலையில்தான்.

பிறர் தரும் அறிவுரை எத்தகையது, அதன் பின் உள்ள உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும்.

வெற்றி அடைந்தவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.

அதனால் அவர்கள் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.

அந்த ஓட்டத்தில் உணவு, தூக்கம், உடல்நலம், குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் ஆகிய அம்சங்களுக்குச் சில நேரங்களில் உரிய முக்கியத்துவம் கொடுக்கமுடியாமல் போகலாம்.

இவ்வளவு சவால்களைக் கடந்து முன்னேறுவோரின் வெற்றியைக் கொண்டாடவேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

ஆனால் காலம், நேரம், அதிர்ஷ்டம், சிபாரிசு இவற்றால்தான் வாய்ப்புகளும் புகழும் கிடைத்ததாகக் கூறி அவர்களின் உழைப்பை இழிவுபடுத்தாமல் இருக்கலாமே!

அன்புடன்
ஷரளாதேவி கோபால் 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்