பேசுவோமா

Images
  • clean

சுத்தம் செய்யுங்கள்... மனத்தையும்

உங்கள் மனத்தைக் கடைசியாக எப்போது சுத்தம் செய்தீர்கள் ?


வீட்டைச் சுத்தம் செய்வது பற்றி எல்லாருக்குமே தெரியும்.

இது என்ன? புதிதாக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா ? வீட்டைப் போல் மனத்தையும் அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம் என்பது என் நம்பிக்கை.

வீட்டை அடிக்கடி சுத்தம் செய்யாமற்போனால் எப்படித் தூசு சேருமோ அதேபோல் மனத்தைச் சுத்தம் செய்யாமற்போனால் தேவையற்ற எண்ணங்கள் அதில் படிந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மைப் பாதிக்கத் தொடங்கலாம்.

சன்னல்களை மூடி வைத்தாலும், கனமான திரையிட்டாலும்கூட, எப்படியோ வீட்டுக்குள் தூசு படியத்தான் செய்கிறது.
சன்னல்கள் எல்லாமே மூடப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகளிலும்கூட நாளடைவில் தூசு படியத்தான் செய்கிறது.


அதுபோல் எவ்வளவு நல்ல எண்ணங்களைக் கொண்டிருந்தாலும் நமது மனத்திலும் தேவையற்ற எண்ணங்களும் சிந்தனைகளும் படியத்தான் செய்கின்றன.

நல்ல எண்ணங்கள், நம் நல்லொழுக்கத்துக்கு வித்தாகும். அதுபோல, தீய எண்ணங்களுக்குத் தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு.

அதனால்தான் அவ்வப்போது வீட்டைத் தூய்மை செய்வதுபோல மனத்தையும் ஒட்டடை அடிக்கவேண்டும்.

இதை மாதம் ஒருமுறையாவது செய்யலாம்.

விருப்பு வெறுப்பில்லாமல், நம்மை நாமே விமர்சனத்துக்கு உட்படுத்தி, நம் எண்ணங்களை உற்றுப் பார்க்கலாம்.

பொறாமை, துரோகம், வஞ்சம், அச்சம், கவலை, பழிவாங்கும் மனப்பான்மை போன்ற தீய எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றனவா என
நம்மை நாமே நேர்மையாகப் பரிசீலிக்கலாம்.

அப்படி இருப்பதாக உணர்ந்தால், அதைக் களைவதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்கலாம்.

பிரச்சினை இல்லாத மனிதர்கள் எவரும் உலகில் இல்லை. எல்லாருக்குமே ஏதோ ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.
அதை நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில்தான் எல்லாமே இருக்கிறது.

எதிலுமே நமது கண்ணோட்டம்தான் நமது நிம்மதியைத் தீர்மானிக்கிறது.

பிரச்சினைகளைப் பற்றியும் பிரச்சினைக்குக் காரணமானவர்களைப் பற்றியும் நமது உள்மனது எப்போதுமே சிந்தித்து
அதிலிருந்து விடுபடும் சாத்தியங்களை ஆராய்ந்துகொண்டே இருக்கும். அது மனித இயல்பு.

ஆனால், பிரச்சினையிலிந்து விடுபடுவதற்கான முயற்சியில் நம் அன்புக்குரியவர்களையோ சக மனிதர்களையோ நாம் காயப்படுத்திவிடாமலிருப்பது அவசியம்.


நாமாகப் பலவற்றைக் கற்பனை செய்துகொண்டு ஆபத்தான முடிவுகளை எடுத்துவிடக்கூடாது. கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் ! தீர விசாரிப்பது ஒன்றே மெய் !
இது இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாறப்போவதில்லை.

நம்மைவிடத் திறன் குறைந்தவர்களாக நாம் கருதுவோர், வாழ்க்கையில் வெற்றிபெறும்போது அதைக்கண்டு பொறாமைப்படத் தேவையில்லை.
நமக்குத் தெரியாத வேறு ஏதோ திறமை அவர்களுக்குள் ஒளிந்திருக்கலாம்.

அவர்கள் வாழ்க்கை அவர்களுக்கு.. நமது வாழ்க்கை நமக்கு !

பொறாமை ஒரு நச்சுக் கிருமி. அக்னிக் குஞ்சு. பிறந்த இடத்தையும் அது சேர்த்தே அழித்துவிடும்.

அதுபோல் தெரிந்தோ தெரியாமலோ நமக்குத் தீங்கிழைத்த ஒருவரைப் பற்றி மனத்துக்குள் கறுவிக்கொண்டே இருப்பது, நமது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.

நடந்தது நடந்துவிட்டது. அடுத்து நடப்பதைப் பார்ப்போம் என்ற போக்குதான் நமக்கு நல்லது.

நமது ஆரோக்கியத்தை முன்னிட்டாவது நமக்குத் தீங்கிழைத்தவர்களை மன்னித்து மறக்கக் கற்றுக்கொள்வது பயனுள்ளது. அது எளிதல்லதான். ஆனால், சாத்தியமாகாத ஒன்றல்ல..

மன்னிப்பு ஒரு மாபெரும் மருந்து நண்பர்களே ! நம்புங்கள்.

ஆனால், எதை மன்னிக்க வேண்டும் எதைச் சகித்துக்கொள்ளக்கூடாது என்ற தெளிவும் நமக்கு அவசியம்.

நம்மைப் பற்றி யாராவது தவறாகப் புரிந்துகொண்டாலோ பேசினாலோ, எல்லா நேரமும் அவர்களிடம் சென்று நாம் தன்னிலை விளக்கம் கொடுக்கத் தேவையில்லை.

அய்யகோ ! நான் என்செய்வேன் ? என்னைப்பற்றி இன்னார் இப்படி நினைக்கிறார்களே என்று புலம்பவும் தேவையில்லை.

சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் என்று சிந்தனையாளர்கள் சொல்வதுண்டு. அதுபோல் மனத்திலுள்ள தேவையற்ற எண்ணங்களைத்
துடைத்துத் துப்புரவு செய்யவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், நம்மால் இன்னும் நிம்மதியாக இருக்கமுடியும்.

அன்புடன்
பொன். மகாலிங்கம்
 

Top