பேசுவோமா

Images
  • Respect
    (படம்: Pixabay)

தேடிவரும் மரியாதை


ஒருவருக்கு மரியாதை கொடுப்பது முக்கியமா ஒருவர் அவருடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காமல் இருப்பது முக்கியமா?

ஒருவரின் நற்குணங்களுக்கும் நல்ல எண்ணங்களுக்கும் சமூகம் பரிசாகத் தருவது மரியாதை.


வயதில் பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.
சிறு வயதிலிருந்தே அது நமக்குச் சொல்லித்தரப்படுகிறது.


ஆனால் அது அவரின் வயதிற்காக மட்டுமே கொடுக்கப்படும் மரியாதை அல்ல.


வயதின் காரணமாக அவர் பெற்றுள்ள அனுபவங்களுக்கும் அவற்றின் மூலம் கிடைத்த நற்பண்புகளுக்குமானது அது.
ஒருவர் நடந்துகொள்ளும் விதம் அவருக்கான மரியாதையையும் மதிப்பையும் தீர்மானிக்கிறது.


நியாயம், அன்பு, அடக்கம், பரிவு.


இத்தகைய பண்புகளைக் கொண்டிருப்போரை மரியாதை தேடி வரும்.


பணம், பதவி ஆகியவற்றால் கிடைக்கும் மரியாதை நிலையானதல்ல.


அவை ஒருவரை விட்டுச்செல்லும்போது, அதுவரை கிடைத்துவந்த மதிப்பும் மரியாதையும் அவற்றுடன் சேர்ந்து போய்விடும்.
ஒருவரின் நற்செயல்களே அவர் மீதான நல்ல அபிப்பிராயம் உருவாகக் காரணமாகின்றன.


அத்தகைய உயர்வான செயல்களைச் செய்வதன் மூலம் ஒருவரின் சுயமரியாதை உணர்வும் மேலோங்கும்.


சுற்றியுள்ளவர்களுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் நடந்துகொள்வது அவசியம். அதுவே ஒருவரின் சுயமரியாதையை உயர்த்தும்.


ஆனால் பல நேரங்களில் சுயமரியாதையைப் பாதித்துக்கொள்ளும் விதத்தில் சிலர் நடந்துகொள்கின்றனர்.


உதாரணத்திற்கு, ஒருவரைச் சந்திக்கும்போது நலம் விசாரிப்பது வழக்கம்.


ஆனால் ஒருசிலர், அதிக அதிகாரம் இருப்போரைக் கூடுதல் மரியாதையுடன் கவனிப்பார்கள்.


ஏன்?
அதிக மரியாதையுடன் நடந்துகொண்டால்... அது தனக்குச் சாதகமாக இருக்கும் என்கிற சுயநலம்தான். இதைப் பலரும் பல இடங்களில் பார்த்திருப்போம்
அப்படிச் செய்வதால் சுயமரியாதைக்குப் பாதிப்பை விளைவிக்கிறோம்.


சுயநலத்துடன் செயல்படுவது மனித இயல்பு. ஒருவர், தனக்குச் சாதகமாக அனைத்தும் அமைய வேண்டும் எனச் சிந்திப்பதில் தவறு இல்லை.


பள்ளிப்பாடங்களில் அதிக மதிப்பெண்கள் வேண்டும்.

வேலையில் பதவி உயர்வு வேண்டும்.
அதிகப் பொறுப்புகள் வேண்டும்.


விரைவாக வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.


ஆனால் இவற்றுக்கெல்லாம் முக்கியம், கடினமாக உழைக்கவேண்டும்.


ஒருவர் செய்யும் வேலையே அவருக்காகப் பேசவேண்டும்.


திறன்களை வெளிக்காட்ட வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.


ஆங்கிலத்தில் Taking the easy way up என்பார்கள். அதேபோல் மிக எளிதில், வேண்டியதை அடைய, குறுக்கு வழியில் செயல்படுவது சரியல்ல. அது நெருக்கமானவர்களை இழக்க வழிவகுக்கக்கூடும்.
இதை நேரடியாகப் பார்ப்பவர்கள் சம்பந்தப்பட்டவர் மீது வைத்திருந்த மரியாதையைக் குறைத்துக்கொள்வார்கள் அல்லது அவரை விட்டு விலகிச்செல்வார்கள்.


இறுதியில் எல்லாவற்றையும் இழந்து, தனிமையில் இருக்கும் நிலையும் ஏற்படும்.


மாறாக ஒருவர் சுயமரியாதை உணர்வுடன் நிமிர்ந்து நடந்தால், அவரைத் தேடிவரும் மரியாதை.


இப்படிக்கு மரியாதையுடன்
யாஸ்மின் பேகம்
 


Top