Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

பேசுவோமா

அண்டைவீட்டாருடன் அன்பா வம்பா

‘வீட்டுக்குச் செல்லவே பயமாக இருக்கிறது’ என்று மூன்றாவது முறையாக தோழி என்னிடம் புலம்பினாள். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் அந்தப் புதிய அடுக்குமாடி வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தாள். ஆக மேல் தளத்தில் வீடு...

வாசிப்புநேரம் -
அண்டைவீட்டாருடன் அன்பா வம்பா

(படம்: Pixabay)

‘வீட்டுக்குச் செல்லவே பயமாக இருக்கிறது’ என்று மூன்றாவது முறையாக தோழி என்னிடம் புலம்பினாள். சில மாதங்களுக்கு முன்புதான் அவள் அந்தப் புதிய அடுக்குமாடி வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தாள்.


ஆக மேல் தளத்தில் வீடு...


காற்றோட்டம், வெளிச்சம், சராசரி நான்கறை வீடுகளைப் போலல்லாமல் நல்ல விசாலமான இடம். முழுமையாக வளர்ச்சியடைந்த வட்டாரத்தில் வீடு அமைந்திருந்ததால், பேருந்து, ரயில், கடைகள், உணவகங்கள் போன்ற வசதிகளுக்கு வெகு தூரம் செல்லவேண்டிய அவசியமில்லை.


தோழியும் அவளின் கணவரும் பார்க்கவேண்டிய எல்லாம் பார்த்து வீட்டைத் தேர்ந்தெடுத்தார்கள். தேவையான சில மாற்றங்களையும் செய்தனர்.


இவ்வளவு செய்தும் வீட்டில் அவர்களுக்கு நிம்மதி இல்லாமல் போனது. என்ன காரணம்?


தோழியின் பக்கத்து வீட்டில் 70 வயது பெண்மணி அவருடைய மகனுடன் வசித்துவந்தார். மகன் காலையில் வேலைக்குக் கிளம்பியவுடன், ‘என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாயா’ என அலறத் தொடங்கிவிடுவார். அரை மணி நேரத்திலிருந்து 1 மணி நேரம் வரை அந்தப் புலம்பல் தொடரும்.


பின்னர் சிறிது நேரம் அமைதி. அதைத் தொடர்ந்து மீண்டும் வேறு பிரச்சினைக்காக முகம் தெரியாத ஒருவரை வசைபாடத் தொடங்கிவிடுவார்.


தோழி வாசலில் காயவைக்கும் துணிகளின் மீது எண்ணெய் ஊற்றுவது...


தோழியின் வீட்டு வாசலில் குப்பைகளைக் கொட்டிச் செல்வது...


இப்படி பல செயல்களில் ஈடுபட்டுவந்தார்.


காரணத்தைக் கேட்கச்சென்ற என் தோழியைத் தாக்க முயற்சி செய்தார் அந்தப் பெண். மகன் இடையில் புகுந்து கட்டுப்படுத்தியதால் தோழி தப்பினார்.


தாயாருக்குச் சில காலமாக மனநிலை சரியில்லை என்றுகூறி மகன் மன்னிப்புக் கேட்டார். தோழியும் பொறுத்துப்போனார்.


அண்டைவீட்டார் எவ்வளவு முக்கியம் என்பதை அந்தச் சம்பவம் எனக்குப் புரியவைத்தது. என் நல்ல காலமோ என்னவோ, இதுவரை எனக்கு அத்தகைய அனுபவம் ஏற்படவில்லை.


5 ஆண்டுக்கு முன்னர்தான் தற்போது வசிக்கும் வீட்டுக்குக் குடிபெயர்ந்தேன்.


பக்கத்தில் 2 வீடுகள்.


ஒரு வீட்டில் வயதான தம்பதி மட்டும். மற்றொரு வீட்டில் மகள், மருமகன், பேரக்குழந்தைகளுடன் வசிக்கும் தாத்தா, பாட்டி.
இரு குடும்பத்தினருமே எங்களைப் பலமுறை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்துள்ளனர்.


அண்டைவீட்டுக்காரர்கள் என்று சொல்வதைக் காட்டிலும் உறவினர்கள் என்று அவர்களை அழைப்பதே சரியாக இருக்கும்.


அவர்கள் அனைவருமே எங்கள் மீது அந்த அளவுக்கு அதிக அக்கறை செலுத்திவருகின்றனர்.


அவர்கள் வீட்டில் என்ன சமைத்தாலும் எங்களுக்கு வந்துவிடும்.


சுற்றுப்பயணம் செல்லும்போது எங்கள் வீட்டுச் செடிகளை அவர்கள்தான் பராமரிப்பார்கள். வேலைக்குக் கிளம்பத் தாமதமாகும் நேரங்களில் பக்கத்துவீட்டுப் பாட்டி வாகனத்தில் என்னை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார்.


எனது வீட்டில், நானும் அம்மாவும் மட்டும்தான். வேலையின் காரணமாக என்னால் அதிக நேரம் வீட்டில் இருக்கமுடிவதில்லை. பொழுதுபோகாத நேரங்களில், பக்கத்து வீட்டுச் சிறுவர்களை வீட்டிற்கு அழைத்துக் ‘குக்கீஸ்’ செய்ய என் அம்மா கற்றுத்தருவார்.


இதனால், என் தாயாருக்கு இருந்துவந்த மன அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.


அண்டை வீட்டாரால் மன அழுத்தத்திற்கு ஆளான தோழி ஒருபுறம்.
மன அழுத்தம் குறைவதற்கு அண்டைவீட்டாரே காரணம் என நினைக்கும் என் தாயார் மறுபுறம்.


உறவுகள், நண்பர்களைப் போலவே அண்டை வீட்டுக்காரர்கள் அமைவதும் ஒரு வரப்பிரசாதம்தான்.


வீட்டில் அமைதியையும் மனநிம்மதியையும் கட்டிக்காப்பது குடும்பத்தினர் என்றால் வெளியே வந்தால் நாம் முதலில் காணும் முகம் பக்கத்து வீட்டுக்காரருடையதுதான்.


அவர்களின் மனநிலை, பழக்க வழக்கங்கள், குணாதியங்கள் ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உறவினர்களுடன் மனக்கசப்பு இருந்தால் அவர்களைப் பார்ப்பதையோ, பேசுவதையோ தவிர்க்கலாம்.


நண்பர்களுக்கும் இது பொருந்தும்.


இவற்றை முடிவுசெய்வதில் கிடைக்கும் இந்த சுதந்திரம், இந்த உரிமை அண்டை வீட்டாரைப் பொறுத்தவரை நமக்கு இருப்பதில்லை.


பிடிக்கிறதோ, இல்லையோ அவர்களைப் பார்த்துத்தான் ஆக வேண்டும்.


பேசித்தான் தீர வேண்டும்.


அப்படி இருக்கையில், எத்தனை இக்கட்டான சூழலையும் மகிழ்ச்சியான ஒன்றாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது.


அன்புடன்
ஷரளா தேவி





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்