Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 4 - மாற்றம் ஒன்றே மாறாதது

ஓடிக்கொண்டிருந்தால் அது நதி. தேங்கியிருந்தால் குட்டை. சிங்கப்பூர் ஒரு நதி. தீராநதி. இது ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது நின்றால் எல்லாம் நிலைகுத்திப் போய்விடும். 

வாசிப்புநேரம் -

ஓடிக்கொண்டிருந்தால் அது நதி. தேங்கியிருந்தால் குட்டை. சிங்கப்பூர் ஒரு நதி. தீராநதி. இது ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அது இங்குள்ள அனைவருக்கும் தெரியும். இது நின்றால் எல்லாம் நிலைகுத்திப் போய்விடும். அதனால்தான் எல்லாரும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். உழைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

சாலை நன்றாகத்தான் இருக்கும். எங்கோ ஓரிடத்தில் சிறிய ஓட்டை அல்லது இலேசான விரிசல் இருக்கலாம். உடனேயே அதனைச் சரிசெய்துவிடுவது இங்கு வாடிக்கை. வழக்கம். காரணம் அதை அப்படியே விட்டுவிட்டால் பிரச்சினை பெரிதாகும். தீர்வுகாண்பதும் சிக்கலாகும். ஏன் வம்பு? எதற்குத் தாமதம்? அதனைக் கருத்தில்கொண்டே இங்கு அனைத்தும் துரித கதியில் இயங்குகின்றன. எதையும் முன்கூட்டியே முறையான பாதைக்குக் கொண்டுவருவதே நல்லது. அதுதான் இங்கு தாரக மந்திரம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறைக்கும் அது பொருந்தும்.

கடைசியாக அதில் மாற்றம் செய்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை அப்படியே தொடர்வது என்பது காலத்துக்குப் பொருந்தாது. இதைப் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் இவ்வாண்டு (2016) ஜனவரி 27ஆம் தேதி நாடாளுமன்றத்தில் விவரித்தார், பிரதமர் லீ சியென் லூங்.

மூன்று அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் :

1. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கான தகுதி அடிப்படைகளை மறுஆய்வு செய்வது.
2. அதிபர் ஆலோசகர் மன்றத்தை வலுப்படுத்துவது.
3. அவ்வப்போது சிறுபான்மையினரும் அதிபராவதை உறுதிசெய்வது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கான தகுதி அடிப்படைகளை மறுஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? அதற்குப் பல காரணங்களைச் சொன்னார் பிரதமர்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி, 1990இல் 72 பில்லியன் வெள்ளி. இன்று, ஏறக்குறைய 400 பில்லியன் வெள்ளி. அரசாங்கச் செலவினம் 25 ஆண்டில் 6 மடங்காகி, 68 பில்லியன் வெள்ளியாக உள்ளது. வெளிநாடுகளில் நாம் வைத்திருந்த நிதி இருப்பு அப்போது 28 பில்லியன் வெள்ளி. இப்போது அது 248 பில்லியன் வெள்ளி. 1990இல் துமாசிக் நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் வெள்ளி. இன்று அது கிட்டத்தட்ட 26 மடங்கு அதிகரித்துவிட்டது. அதன் மதிப்பு 260 பில்லியன் வெள்ளிக்கும் மேல். குறைந்தது 100 மில்லியன் வெள்ளி செலுத்தப்பட்ட மூலதனத்தைக் கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 1993இல் 158. இப்போது அந்த எண்ணிக்கை, 2,100ஐத் தாண்டிவிட்டது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தற்போதைய சூழலில் முன்பைவிட அதிகச் சவால்கள் உள்ளன. எனவே அதிபருக்கான தகுதி அடிப்படைகளை மறுஆய்வு செய்வது முக்கியம்.


அதிபர் ஆலோசகர் மன்றத்தை வலுப்படுத்த வேண்டும் என்பது இரண்டாவது.

சிங்கப்பூர் நகரக்காட்சி. (படம்: Reuters)

நிதி இருப்பைப் பாதுகாப்பதிலும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும் அதிபருக்கு ஆலோசனை கூறுவது மன்றத்தின் முக்கியப் பணிகள். இன்னொன்று, அரசாங்க, அரசாங்கம் சார்ந்த அமைப்புகளின் வரவுசெலவுத் திட்டம், முக்கியப் பதவிகளுக்கான அரசாங்கத்தின் நியமனங்கள். அவற்றை ரத்து அதிகாரத்தின் மூலம் அதிபர் நிராகரிக்க நினைத்தால் முதலில் ஆலோசகர் மன்றத்தின் ஒப்புதலைப் பெறுவது அவசியம்.

மன்றம், அதிபரின் முடிவை ஏற்றுக்கொண்டால், ரத்து அதிகாரம் இறுதியானது. நாடாளுமன்றம் அதன்படி நடக்கவேண்டும். மாறாக மன்றம் மறுத்தாலும்கூட அதிபர் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த முடிவுசெய்லாம். ஆனால் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அதனை முறியடிக்கவும் முடியும்.

மன்றத்தில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள். இரண்டு மாற்று உறுப்பினர்கள். அதிபரும் பிரதமரும் ஆளுக்கு இரண்டு உறுப்பினர்களை நியமிப்பார்கள். தலைமை நீதிபதியும் பொதுச் சேவைத் துறைத் தலைவரும் ஆளுக்கு ஒருவரைத் தெரிவுசெய்வார்கள். உறுப்பினர்களை முதன்முறை நியமனம் செய்யும்போது, 6 ஆண்டுக்கு அது செல்லுபடியாகும். அடுத்தடுத்த முறைகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை அதனைப் புதுப்பித்தாக வேண்டும். மாற்று உறுப்பினர்களைப் பொறுத்தவரை, ஒருவரை அதிபர் முடிவுசெய்வார். மற்றவரைப் பிரதமரின் ஆலோசனைப்படி அதிபர் நியமிப்பார். நியமனம் 4 ஆண்டுக்கு நீடிக்கும். உறுப்பினர்கள். குறைந்தது 35 வயதுடைய இங்கு வசிக்கும் சிங்கப்பூர்க் குடிமக்களாக இருக்க வேண்டும்.

தற்போதைய அதிபர் ஆலோசகர் மன்றத்தின் தலைவர் திரு. J Y பிள்ளை. மற்ற உறுப்பினர்கள் : திருவாளர்கள் S தனபாலன், போஆட் ஷேக் அபு பக்கார் மட்டார், கோ ஜூன் செங், போபி சின் யோக் சூங், லீ ட்சு யாங். மாற்று உறுப்பினர்கள் : திருவாளர்கள் லிம் சீ ஓன், ஸ்டீஃபன் லீ சிங் யென்.

மூன்றாவது, சிறுபான்மையினரும் அவ்வப்போது அதிபர் பொறுப்பில் இருப்பதை உறுதிசெய்வது.

நாட்டின் தலைமகனான அதிபர், நம் பல்லினச் சமுதாயத்தில் சிங்கப்பூரர்கள் அனைவரையும் பிரதிநிதிப்பவர். 1991ஆம் ஆண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை அறிமுகம் கண்டதிலிருந்து இதுவரை மலாய் இனத்தைச் சேர்ந்தவர் அதிபராகவில்லை. எதிர்காலத்தில் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவினால், சிறுபான்மையினர், அதிபராவதற்கு வாய்ப்புகள் மிகவும் கடினமாகவிடும் என்றார் திரு. லீ. நாடாளுமன்றத் தேர்தலில் இதே கதைதான் நிலவியது. அதைச் சரிக்கட்டத்தான் குழுத் தொகுதி முறை நடப்புக்கு வந்தது. நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் பிரதிநிதிக்கப்படுவதை அது உறுதிசெய்தது. அதே போன்று அதிபர் தேர்தலிலும் ஓர் உத்திமுறையைக் கொண்டுவர வேண்டும் என்பது திரு. லீயின் எண்ணம்.

மூன்று அம்சங்கள் பற்றியும் விரிவாக ஆராய வேண்டும். பின்னர் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும். அதற்காகத் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் அரசமைப்புச் சட்ட ஆணைக் குழுவைத் திரு. லீ நியமித்தார். அந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் யார் யார்? குழு மேற்கொண்ட பணிகள் என்னென்ன?

அவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்