Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

எதிரொலி

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 2 - எங்குத் தொடங்கியது இந்த யோசனை?

1984 ஏப்ரல் 15. தஞ்சோங் பகாரில் தொகுதி உலா போகிறார் அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ. மக்களைச் சந்திக்கிறார். அது ஒன்றும் புதிதல்ல. எப்போதும் செய்வதுதான். ஆனால் அவர் அன்று சொன்ன தகவல் புதியது. நாட்டின் வளர்ச்சி பற்றியும் அரசாங்கம் பற்றியும் பேசுபவர் அன்று அதிபர் முறை குறித்துப் பேசினார்.

வாசிப்புநேரம் -
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை – பாகம் 2 - எங்குத் தொடங்கியது இந்த யோசனை?

இஸ்தானா. (படம்: gov.sg)

1984 ஏப்ரல் 15. தஞ்சோங் பகாரில் தொகுதி உலா போகிறார் அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ. மக்களைச் சந்திக்கிறார். அது ஒன்றும் புதிதல்ல. எப்போதும் செய்வதுதான். ஆனால் அவர் அன்று சொன்ன தகவல் புதியது. நாட்டின் வளர்ச்சி பற்றியும் அரசாங்கம் பற்றியும் பேசுபவர் அன்று அதிபர் முறை குறித்துப் பேசினார். அதிபர் முறையில் புதிய மாற்றம் கொண்டுவரலாமா என்று யோசிப்பதாகச் சொன்னார் திரு. லீ. மீண்டும் அந்த ஆண்டின் தேசிய தினக் கூட்ட உரையில் அது பற்றி விளக்கினார். என்ன காரணம்?

படாத பாடுபட்டு சிங்கப்பூரை ஒரு நிலைக்குக் கொண்டுவந்தாகிவிட்டது. நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது. நிதிக் களஞ்சியம் நிரம்பத் தொடங்குகிறது. ஆனால் ஆட்சி மாறிவிட்டால்? போக்கிரித்தனமான அரசாங்கத்தின் கையில் ஆட்சி கிடைத்துவிட்டால்? என்னவாகும்? எறும்பு போல் சிறுகச் சிறுகச் சேர்த்ததெல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போய்விடும். விடக்கூடாது. ஒரு போதும் அந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு நேர்ந்தால் அதைத் தடுக்கக்கூடிய ஒரு முறை அவசியம்.

சிந்தித்தவருக்குச் சிக்கியது அதிபர் முறை. நாட்டின் இருப்பைக் காக்க அதிபர் பதவியை அதிக அதிகாரம் கொண்ட ஒன்றாக மாற்றலாம். ஆனால் அவர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவராக இருக்கக்கூடாது. அது ஏன்? சுருட்டும் அரசாங்கமாக இருந்து அதனுடன் அதிபரும் சேர்ந்துகொண்டால்? முதலுக்கே மோசமாகிவிடும். யோசித்தார் திரு. லீ. நாட்டையும் நாட்டுமக்களின் வியர்வையையும், அதுதான் பொருளியல் ரீதியில் சொன்னால் நிதி இருப்பையும், பாதுகாக்க வேண்டியது தமது கடமை என்று எண்ணினார். செயல்பட்டார்.

1988 ஜூலை. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் முறை குறித்த வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அப்போதைய துணைப் பிரதமர் கோ சோக் தோங். அரசாங்கத்தின் ஆதரவு இருந்தது. 1990 ஆகஸ்ட்டில் இரண்டாவது வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் கடும் விவாதம். அதன் பிறகு, 1991 ஜனவரியில் புதிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஃபிப்ரவரி முதல் தேதி, அதிபரை மக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை சட்டமாகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு அப்படி என்ன கூடுதல் அதிகாரங்களும் பொறுப்புகளும் இருக்கமுடியும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் ஆறு ஆண்டுக்குப் பதவியில் இருக்கலாம். தேசிய நிதி இருப்பு, நிதிக் கொள்கைகள், பொதுச் சேவைத் துறையின் முக்கிய நியமனங்களில் அவர் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும். அத்துடன் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் கைதுநடவடிக்கைகள், லஞ்ச ஊழல் புலனாய்வுத் துறை மேற்கொள்ளும் புலனாய்வுகள், சமய நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு உத்தரவுகள் ஆகியவற்றை அதிபர் தடுத்து நிறுத்தலாம். ஆனால் அவை குறித்து முடிவெடுக்க முடியாது.

யார் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக முடியுமா?. முடியாது. காரணம், அதற்கெனச் சில தகுதி முறைகளை ஒருவர் நிறைவேற்றியாக வேண்டும். 

முதலில் அவர் சிங்கப்பூர்க் குடிமகனாக இருக்கவேண்டும். குறைந்தது 45 வயதுடையவராக இருக்க வேண்டும். அமைச்சர், தலைமை நீதிபதி, நாடாளுமன்ற நாயகர், உச்ச நீதிமன்ற நீதிபதி, சட்டத் துறை ஆணையர், தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், தலைமைக் கணக்காளர், பொதுச் சேவைத் துறையின் தலைவர், நிரந்தரச் செயலாளர், 100 மில்லியன் வெள்ளி மூலதனத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் தலைவர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரியாகக் குறைந்தது மூன்றாண்டுக்குப் பணியாற்றியிருக்க வேண்டும். அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கக்கூடாது.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதிநிலைகளை உறுதிசெய்யும் நோக்கில் அரசாங்கம், குழுவொன்றை அமைத்தது. அதற்கு ஒரு தலைவர் இருப்பார். இரண்டு உறுப்பினர்கள். உத்தேச வேட்பாளரைப் பற்றி மனநிறைவு ஏற்பட்டால், குழு, சான்றிதழை வழங்கும். நேர்மை, நல்லொழுக்கம், நன்மதிப்பு ஆகிய பண்புநலன்களை அவர் கொண்டிருக்கிறார் என்பதையும் நிதி நிர்வாகத்தில் தேர்ந்த அனுபவமும் ஆற்றலும் பெற்றவர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டியது குழுவின் பொறுப்பு.

அதிபருக்குக் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட சட்டம் 1991ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி நடப்புக்கு வருகிறது. அந்த அதிகாரங்களைப் பெற்ற நாட்டின் முதல் அதிபர் எனும் பெருமை அப்போதைய அதிபர் திரு. வீ கிம் வீக்குச் சென்றது. இருந்தாலும் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் அல்லர். அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் திரு. ஓங் டெங் சியோங். நாட்டின் ஐந்தாவது அதிபர். துணைப் பிரதமர், மக்கள் செயல் கட்சியின் தலைவர் ஆகிய பொறுப்புகளைத் துறந்து தேர்தல் களத்தில் இறங்கியவர்.

எதிர்த்து நின்றவர், முன்னாள் தலைமைக் கணக்காளரும் (சிங்கப்பூரின் முதல் தலைமைக் கணக்காளர்) POSB வங்கியின் ஓய்வுபெற்ற நிர்வாகத் தலைவருமான திரு. சுவா கிம் இயாவ். எதிர்த்து நின்றவர் என்று சொல்வதை விட, நிற்கவைக்கப்பட்டவர் என்பதே சரியாக இருக்கும். திரு. சுவா போட்டியிட விரும்பவில்லை. இருந்தாலும் அப்போதைய பிரதமர் கோ சோக் தோங் உட்பட பலரும் கேட்டுகொண்டதற்கிணங்க அவர் போட்டியிட்டார். வாக்காளர்களுக்குத் தெரிவுசெய்ய இன்னொரு வேட்பாளர் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது திரு. கோவின் எண்ணம்.

திரு. ஓங் தம்மைக் காட்டிலும் சிறந்த வேட்பாளர் என்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார், திரு. சுவா. ஏறக்குறைய 59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அதிபரானார் திரு. ஓங். தோல்வியைத் தழுவினாலும் திரு. சுவாவிற்கு எதிர்பார்ப்புக்கும் மேலாகத் சுமார் 41 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன. அவர், இவ்வாண்டு (2016) ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி காலமானார்.

1993 செப்டம்பர் முதல் தேதி பதவியேற்ற திரு. ஓங் 1999 ஆகஸ்ட் வரை அந்தப் பொறுப்பில் நீடித்தார். பின்னர் அடுத்த தவணைக்குத் தொடர்வதில்லை என்று முடிவெடுத்தார். பின்னர் ஓய்வுபெற்றார். ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திரு. ஓங், 2002 ஃபிப்ரவரி 8ஆம் தேதி மீளாத்துயில் கொண்டார்.

அவருக்கு அடுத்து வந்தவர் திரு. S R நாதன். மலேசிய, அமெரிக்க நாடுகளுக்குத் தூதராக இருந்தவர். 1999இலும் சரி, 2005இலும் சரி, போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நாட்டின் வரலாற்றில் ஆக அதிகக் காலம் அதிபர் பதவியில் இருந்தவர். 2011ஆம் ஆண்டு, மூன்றாம் தவணைக்குப் போட்டியிடப்போவதில்லை என்று கூறிவிட்டார் திரு. நாதன். உடல் நலிவுற்றதன் காரணமாக இவ்வாண்டு (2016) ஆகஸ்ட் 22ஆம் தேதி திரு. நாதன் இயற்கை எய்தினார்.

அதிபர் தேர்தல் களம் சூடுபிடித்தது அதுதான் முதல் முறை. நான்கு வேட்பாளர்கள். நான்கு டான்கள். முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் டோனி டான் கெங் யாம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் செங் போக். NTUC Incomeஇன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி டான் கின் லியான். இறுதியாக, முன்னாள் பொதுச் சேவைத் துறை அதிகாரியும் முதலீட்டு நிர்வாகியுமான திரு. டான் ஜீ சே. பிரசாரம் அனல் பறந்தது. நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சொல்வார்களே ‘photo finish என்று’, அது மாதிரி இருந்தன தேர்தல் முடிவுகள்.

டாக்டர் டோனி டான் நூலிழையில் வெற்றிபெற்றார். அவருக்குக் கிடைத்தது 35.2 விழுக்காட்டு வாக்குகள். டாக்டர் டான் செங் போக்கிற்கு 34.8 விழுக்காட்டு வாக்குகள். திரு. டான் ஜீ சே, 25 விழுக்காட்டு வாக்குகளையும் திரு. டான் கின் லியான், சுமார் 5 விழுக்காட்டு வாக்குகளையும் பெற்றனர்.

2011 செப்டம்பர் 1. நாட்டின் ஏழாவது அதிபராகப் பொறுப்பேற்றார் 71 வயது டாக்டர் டோனி டான். அடுத்த அதிபர் தேர்தல், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் (2017 ஆகஸ்ட்) நடந்தாக வேண்டும்.

சரி இந்த நிலையில் அதிபர் தேர்தல் முறை எதற்காக மீண்டும் மறுஆய்வு செய்யப்படுகிறது?

அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்