Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒரு வெள்ளி கையூட்டுப் பெற்றாலும், குற்றம் குற்றமே - லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு

கொள்கலன்களை நேரத்தோடு திருப்பிக்கொடுப்பதற்கு ஒரு வெள்ளி என்ற கணக்கில், இருவரும் கையூட்டுப் பெற்று வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
ஒரு வெள்ளி கையூட்டுப் பெற்றாலும், குற்றம் குற்றமே - லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு

(படம்:செய்தி)

பாரந்தூக்கி வாகனத்தை இயக்கும் ஓட்டுநர்கள் இருவர் மீது இன்று, ஒவ்வொரு வெள்ளியாகக் கையூட்டுப் பெற்றதாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

சென் ஸிலியாங் (Chen Ziliang), ஸாவோ யூசுன் (Zhao Yucun) ஆகிய இருவரும், கொஜெண்ட் கொள்கலன் கிடங்கில் பளு ஏற்றும் இயந்திரத்தை இயக்கும் பணியில் இருந்தனர். 

அவர்கள் இருவரும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் கனரக வாகன ஓட்டுநர்களிடமிருந்து, சிறு சிறு தொகையைக் கையூட்டாய்ப் பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. 

லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் அந்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன. 

கொள்கலன்களை நேரத்தோடு திருப்பிக்கொடுப்பதற்கு ஒரு வெள்ளி என்ற கணக்கில், இருவரும் கையூட்டுப் பெற்று வந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 100,000 வெள்ளி வரை அபராதமோ, அதிகபட்சமாக ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையோ, இரண்டுமோ விதிக்கப்படலாம்.

ஒரு வெள்ளி கையூட்டாகப் பெற்றாலும் குற்றம் குற்றமே என்பதை லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு நினைவூட்டியது.

"ஊழியர்கள் அவர்கள் பணிகளை நியாயமான முறையில் மேற்கொள்ளவேண்டும். ஒரு பணியை மேற்கொள்ள கையூட்டுப் பெறுவது, அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் குற்றமாகவே கருதப்படும்" என்று பிரிவு தெரிவித்தது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்