Images
  • SH
    (படம்: Dewi Fabbri)

பொருளியல் உறவை வலுப்படுத்த சிங்கப்பூர், பங்களாதேஷ் இடையே ஒப்பந்தங்கள்

சிங்கப்பூர்: சிங்கப்பூரும் பங்களாதேஷும் நான்கு இணக்கக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்ற முதலாவது பங்களாதேஷ் - சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கில் அவை கையெழுத்தாகின.
பங்களாதேஷ் சந்தையில் சிங்கப்பூர் நிறுவனங்கள் கால்பதிக்க வழிவகுக்கும் ஓர் இணக்கக் குறிப்பை IE சிங்கப்பூர் அமைப்பும் பங்களாதேஷ் முதலீட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து செயல்படுத்தும்.

'மின்னிலக்க பங்களாதேஷ் தொலைநோக்கு 2021' என்ற திட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கச் சேவை அதிகாரிகளுக்குப் பயிற்சி வழங்குவதில் இருநாடுகளும் ஒத்துழைக்க மற்றோர் இணைக்கக் குறிப்பு வகைசெய்கிறது.

இருநாட்டு வர்த்தக, தொழில் சம்மேளனங்களுக்கு இடையில் மூன்றாம் இணக்கக் குறிப்பும், உற்பத்தித்துறை தொடர்பில் நான்காவது இணக்கக் குறிப்பும் கையெழுத்தாகின.

சிங்கப்பூருக்கு முதன்முறையாக அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினாவும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் லிம் ஹிங் கியாங்கும் அதனைப் பார்வையிட்டனர்.

கடந்த பத்தாண்டில் பங்களாதேஷின் பொருளியல் 6 முதல் 7 விழுக்காடு வரை வளர்ந்துள்ளதாகவும் வெளிப்புறச் சவால்கள் இருந்தபோதும் அந்நாடு தொடர்ந்து பலமாகவும் மீள்திறனுடனும் இருப்பதாகத் திரு. லிம் கூறினார்.

Top