Images
  • Singapore

ஒரு நாள் நோன்பிருந்த நிருபர்கள் என்ன சமைத்தனர் (காணொளி)

நோன்பு மாதத்தையொட்டி எங்கள் நிருபர்கள் நித்திஷ், காயத்திரி இருவரும் நிருபர் அபிடாவுடன் ஒரு நாள் முழுதும் உணவு தண்ணீர் இன்றி நோன்பிருந்தனர்.

அவர்கள் நோன்பு துறக்க அபிடாவின் குடும்பத்தாருடன் விருந்துக்குத் தயார் செய்தனர். அவர்கள் சமைத்த ரொட்டி ஜாலா, கோழிக் குழம்பு, ஜம்பொட் ஜம்பொட், கத்திரா பானத்தின் சமையல் குறிப்புகள் இதோ:


ரொட்டி ஜாலா

- 500 கிராம் மைதா மாவு
- 3 முட்டைகள்
- 10 மில்லிலிட்டர் தேங்காய்ப் பால்
- 20 மில்லிலிட்டர் தண்ணீர்ப் பால் (Evaporated Milk)
- 250 மில்லிலிட்டர் தண்ணீர்
- மஞ்சள் வண்ணம் சிறிதளவு
- உப்பு சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், 3 முட்டைகளைச் சேர்க்கவும். அதனுடன் தேங்காய்ப் பால், தண்ணீர்ப் பாலைச் சேர்க்கவும். பின்னர், உப்பு சேர்க்கவும். கலவையில் தண்ணீர் ஊற்றவும். கலவை விழுது பதம் வரும் வரை தண்ணீர் சேர்க்கவும். கலவையில் கட்டிகளை உடைக்க அதை மிக்ஸியில் அரைக்கவும். கலவை கட்டிகள் இல்லாமல் இருக்கும் போது சூடான தோசைக்கல்லின் மேல் ரொட்டி ஜாலா குழலில் மாவுக் கலவையை ஊற்றி சுடவும். ரொட்டி ஜாலா பொன்னிறமானதும் அது தயாராகிவிடும்.


கோழிக் குழம்பு

- 1 கோழி, மஞ்சள் தூளில் ஊறவைத்தது
- 3 உருளைக் கிழங்கு, பெரிதாக வெட்டிய துண்டுகள்
- 1 தக்காளி நறுக்கியது
- 1 வெங்காயம், நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது
- 3 பாண்டான் இலைகள்
- 3 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 2 மேசைக்கரண்டி கோழிக் குழம்பு மசாலா
- 2 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்
- 1 தேக்கரண்டி கரம் மசாலா
- உப்பு சிறிதளவு
- கொத்தமல்லி

ஒரு பெரிய பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடாகிய பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கொஞ்சம் கொத்தமல்லி, பாண்டான் இலைகள் ஆகியவற்றை வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டின் நறுமணம் வரும் போது கரம் மசாலா, மிளகாய்த் தூள், கோழிக் குழம்பு மசாலாவைச் சேர்க்கவும். மசாலா நன்கு வதங்கியப் பின் கோழித் துண்டுகளையும் கிழங்கையும் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றி குழம்பைக் கொதிக்கவிடவும். குழம்பு சற்று சுண்டி வந்தவுடன் மீதம் உள்ள கொத்தமல்லியைச் சேர்த்து இறக்கவும்.


ஜம்பொட் ஜம்பொட்

- 100 கிராம் மைதா மாவு
- 3 வாழைப்பழங்கள்
- 2 மேசைக்கரண்டி சர்க்கரை
- தேங்காய்ப்பால் சிறிதளவு அல்லது தேங்காய்ப்பூ
- உப்பு சிறிதளவு

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழங்களை உரித்து மசிக்கவும். வாழைப்பழங்களை நன்கு மசித்தப் பின் சர்க்கரையையும் சேர்க்கவும் தேங்காய்ப்பாலையும் சேர்க்கவும். மைதா மாவு, உப்பு இரண்டையும் சேர்த்து கலவையாகக் கிண்டவும். விழுது பதம் வந்தவுடன் கலவையை கரண்டியால் எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும். பொன்னிறமானதும் ஜம்பொட் ஜம்பொட் தயார்.


கத்திரா பானம்

- 100 மில்லிலிட்டர் ரோஸ் சிரப்
- 500 மில்லிலிட்டர் தண்ணீர்
- 50 மில்லிலீட்டர் தண்ணீர்ப் பால்
- 5 மேசைக்கரண்டி ஊற வைத்த பேசில் விதைகள்

ஒரு கூஜாவில் ரோஸ் சிராப், தண்ணீர் இரண்டையும் கலக்கவும். அதனுடன் தண்ணீர்ப் பாலையும் ஊற வைத்த பேசில் விதைகளையும் சேர்க்கவும். பானத்தைச் சற்று நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைத்து அருந்தலாம்.



 

Top