Images
  • ட்ர் ங்க் (1)

'மலேசியாவுடனான தற்காப்பு உறவுகள் வலுவடைந்து வருகின்றன': இங் எங் ஹென்

மலேசியா: பொதுத் தேர்தலுக்காக, மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், DSA எனப்படும் ஆசியத் தற்காப்புச் சேவைகள் கண்காட்சியை, காபந்து அரசாங்கம் ஏற்று நடத்துகிறது.

அது கண்காட்சியின் இலக்கையும், மாநாட்டின் நோக்கத்தையும் எந்தவிதத்திலும் பாதிக்காது என்று தாம் நம்புவதாக, மலேசியத் தற்காப்புத் துறைத் தலைவர் ஜெனரல் முகமது அஃபாண்டி கூறினார்.

பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள உடன்பாடுகள், கண்காட்சியின்போது கையெழுத்திடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சிக்கு இடையே, புத்ராஜெயா கருத்தரங்கு என்ற பெயரிலான வட்டாரப் பாதுகாப்பு மாநாடும் நடைபெறுகிறது.

அதில் சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென்னும், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தற்காப்பு அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

முன்னதாக டாக்டர் இங், மலேசியத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசைனைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது இருநாடுகளும் அனுபவித்துவரும் வலுவான தற்காப்பு உறவு மேலும் வலுவடைந்து வருவதாக டாக்டர் இங் குறிப்பிட்டார்.

இருநாட்டுத் தற்காப்பு உறவு மேலும் வளர்ச்சியடைவதைக் காண, திரு. ஹிஷாமுதீன் தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டியதாக அவர் சொன்னார்.

கோலாலம்பூரில், 4 நாள் நீடிக்கும் கண்காட்சியைக் காண, 60-ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரள்வர் என மதிப்பிடப்படுகிறது.
 

உங்கள் கருத்து

Top