Images
  • 178,000
    (படம்: TODAY)

$178,000 கையூட்டுக் கொடுத்ததாக நிறுவன இயக்குநர் மீது குற்றச்சாட்டு


கடல்துறைத் தளவாடம் மற்றும் போக்குவரத்துச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் இயக்குநர் மீது 178,150 வெள்ளி கையூட்டு கொடுத்ததாக 40 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

310 சம்பவங்களில் 40 பேருக்குக் கையூட்டுக் கொடுத்ததாக 49 வயது டான் சீ கியோங் (Tan Chee Keong) மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடல்துறை முகவர்களும் கப்பல் பணி ஒருங்கிணைப்பாளர்களும் அவரிடம் கையூட்டுப் பெற்றவர்களில் அடங்குவர்.

Hai Hup Huat எனும் அந்தக் கடல்துறைத் தளவாடம் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் வழங்கும் நிறுவனத்தின் வர்த்தக நலனை மேம்படுத்தும் நோக்கில், கையூட்டுக் கொடுத்ததாக டான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2008இற்கும் 2015இற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் கையூட்டுக் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

70,000 வெள்ளி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டான் இம்மாதம் 20ஆம் தேதி விசாரணைக்காக நீதிமன்றம் திரும்புவார்.

குற்றம் நிரூபணமானால் அவருக்கு ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் 100,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
 

Top