Images
  • scam phone
    (கோப்புப் படம்: Jeremy Long)

அவசர எண்களை இடைவிடாமல் அழைத்துத் தொல்லை கொடுக்கும்படித் தூண்டியதாக நம்பப்படும் இருவர் மீது விசாரணை

அவசர எண்களை இடைவிடாமல் அழைத்துத் தொந்தரவு கொடுக்கும்படி ஊக்குவித்ததாக நம்பப்படும் இருவரை விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவை COVID-19 தொடர்பில் மக்களுக்கு உதவுவதோடு மேலும் சில சேவைகளை வழங்கக்கூடிய அவசர எண்கள்.

அந்த எண்களைத் தொடர்புகொண்டு, தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்குக் கடுமையாக்கப்பட்ட COVID-19 கட்டுப்பாடுகள் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு ஓர் ஆடவரும் பெண்ணும் சுமார் 2,000 பேரை Telegram சேவை மூலம் தூண்டியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்பில் சென்ற மாதம் 18ஆம் தேதி காவல்துறைக்குப் புகார் அளிக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் கருத்தறியும் நடவடிக்கையை மேற்கொள்வதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் காவல்துறை சொன்னது.

ஒருமுறை அழைத்த பின்னர், மறுநாள் மீண்டும் அழைக்குமாறு அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

அதனால், அரசாங்க ஊழியர்களின் வேலையில் இடையூறு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகக் காவல்துறை கூறியது.

தூண்டிவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது ஆடவரும், 45 வயதுப் பெண்ணும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் ஆலோசனைப்படி விசாரிக்கப்படுகின்றனர்.

அரசாங்க ஊழியர்களின் வேலையில் இடையூறு விளைவிக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, 2,500 வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

-CNA/ic(rw)

Top