Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தின் அதிர்ஷ்ட குலுக்கில் இருவர் வெற்றி

சாங்கி விமான நிலையக் குழுமத்தின் சில்லறை விற்பனைக்கான அதிர்ஷ்டக் குலுக்கில், இம்முறை அதிர்ஷ்டக் காற்று ஆடவர் இருவர் பக்கம் வீசியுள்ளது.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தின் அதிர்ஷ்ட குலுக்கில் இருவர் வெற்றி

(படம்: Changi Airport Group)

சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையக் குழுமத்தின் சில்லறை விற்பனைக்கான அதிர்ஷ்டக் குலுக்கில், இம்முறை அதிர்ஷ்டக் காற்று ஆடவர் இருவர் பக்கம் வீசியுள்ளது.

Be a Changi Millionaire அதிர்ஷ்டக் குலுக்கின் ஆக உயரிய பரிசுகளை அவர்கள் பெற்றனர்.

இந்தோனேசியத் தொழிலதிபர் 45-வயது ஓடி ரெஹாட்டா (Oddie Rehatta) திடீர் கோடீஸ்வரரானார்.

சீனாவைச் சேர்ந்த 26-வயது விளையாட்டுப்  பயிற்றுவிப்பாளர் ஸாங் ஸுசாவ் (Zhang Xuchao) வோல்வோ S90 T5 ரக சொகுசுக் காரை வென்றார்.

விமான நிலையத்தின் வரி-இல்லா DFS கடைகளில் கடந்த ஆண்டு நண்பருக்காகப் பொருட்களை வாங்கியபோது திரு. ஓடி அதிர்ஷ்டக் குலுக்கிற்குத் தகுதிபெற்றார்.

ஒரு மில்லியன் பரிசுத் தொகையின் ஒரு பகுதியைத் தனது நிறுவனத்தில் முதலீடு செய்யவிருப்பதாகவும், மற்றொரு பகுதியை நன்கொடையாகக் கொடுக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

முக்கியமாகத் தனது குடும்பத்தினருடன் மெக்காவிற்குப் புனிதப் பயணம் செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார் திரு. ஓடி.

அழகுச் சாதனப் பொருட்களால் அடித்தது அதிர்ஷ்டம் திரு. ஸாங்குக்கு.

தனது காதலிக்காக அழகுச் சாதனப் பொருட்கள் வாங்கியதால் அதிர்ஷ்டக் குலுக்கில் சேர்ந்த அவருக்கு புத்தம்புதிய வோல்வோ கார் பரிசாகக் கிடைத்தது.

காரை சிங்கப்பூரில் விற்று, கிடைக்கும் தொகைக்குச் சீனாவில் மற்றொரு வோல்வோ காரை வாங்குவது அவரது திட்டம்.

அதிர்ஷ்டக் குலுக்கின் மூலம் 7.6 விழுக்காடு விற்பனை அதிகரித்திருப்பதாகச் சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.

சீனா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் பயணிகள் அதிகம் செலவிட்டதாக விமான நிலையம் தெரிவித்தது.

அண்மை அதிர்ஷ்டக் குலுக்கிற்கு, 221 நாடுகளைச் சேர்ந்த 1.5 மில்லியன் பேர் தகுதிபெற்றிருந்தனர்.

இவ்வாண்டின் அதிர்ஷ்டக் குலுக்கு, மே மாதம் தொடங்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்