Images
  • neh parly

இராணுவ வீரர்களின் மரணங்கள்: மன்னிப்புக் கேட்கும் தற்காப்பு அமைச்சர்

சமீபத்தில் தேசிய சேவைப் பயிற்சிகளின் போது ஏற்பட்ட மரணங்களுக்குத் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒவ்வோர் இராணுவ வீரருக்கும் தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் பொறுப்பேற்கும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிப்புறப் பரிசீலனைக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப பயிற்சிகளின் போது மேலும் பல பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என்று டாக்டர் இங் குறிப்பிட்டார்.

அத்துடன், விதிமுறைகளுக்கு ஏற்ப வீரர்கள் நடந்துகொள்கிறார்களா என்பதைக் கண்டறிய பயிற்சி இடங்களில் தணிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

முழுநேர தேசிய சேவையாளர் லியு காய் (Liu Kai) கடந்த ஆண்டு பயிற்சியின் போது மாண்டது குறித்து விசாரணைக் குழு மேற்கொண்ட புலனாய்வின் முடிவுகளை இன்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டுப் பேசினார் தற்காப்பு அமைச்சர்.

முதல் நிலைக் கார்ப்பரல் லியு காய் ஓட்டிக்கொண்டிருந்த Land Rover ரக வாகனத்துடன் Bionix வாகனம் மோதியதில் அவருடைய தொண்டை நசுக்கப்பட்டு மூச்சுத் திணறலால் அவர் மாண்டதாக டாக்டர் இங் தெரிவித்தார்.

Bionix கவச வாகனத்தை நிறுத்தும்படி பலமுறை எச்சரிக்கப்பட்ட போதும் அதன் ஓட்டுநர் அதனைப் பின்னால் செலுத்தியதாகப் புலனாய்வில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து, Bionix கவச வாகனம் தொடர்பான பயிற்சிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் இங் குறிப்பிட்டார்.

கடந்த 17 மாதங்களில் நிகழ்ந்த 4 மரணங்களைத் தொடர்ந்து பல பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எல்லா இராணுவப் பிரிவுகளும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதை உறுதிசெய்ய இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அலுவலகமும் அமைக்கப்படும்.

பாதுகாப்பைப் புறக்கணிப்பவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்வர் என்றும் அமைச்சர் இங் வலியுறுத்தினார். 

Top