Images
  • anwar in singapore
    திரு. அன்வார் இப்ராஹிம். படம்: Amir Yusof

புதிய மலேசியாவில் ஊழலுக்கு இடமிருக்காது - திரு. அன்வார் இப்ராஹிம்

மலேசியாவின் கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், ஊடகச் சுதந்திரம், தவறாக ஆதிக்கம் செலுத்துவோரை ஆகச் சிறப்பாகக் கையாள உதவக்கூடியது என்று கூறியுள்ளார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர், திறமைக்கு முன்னுரிமை வழங்கும் நாடாக மலேசியா இருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு நாள் நடைபெற்ற இவ்வாண்டு மாநாடு, உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்களையும் சிந்தனையாளர்களையும் ஒன்றிணைத்தது.  ஒன்றன் பின் ஒன்றாக நடந்த அமர்வுகளில், நிதித் துறையையும் அரசியலையும் பாதிக்கும் அம்சங்கள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

வட்டாரப் பாதுகாப்பு சவால்கள் முதல், பெருந் தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்துதல் வரையிலான பல்வேறு அம்சங்கள் குறித்து மாநாட்டில் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

திரு. அன்வார், புதிய மலேசியாவில் ஊழலுக்கு இடமிருக்காது என்று கூறினார்.  மேலும், மலேசியாவில் அரசியல் சீர்திருத்தங்களுக்கும் அவர் கடப்பாடு தெரிவித்தார்.

அத்துடன், அவர் மலேசியாவின் தற்போதைய பிரதமர் மகாதீர் முகமதுடன் தமக்கிருக்கும் பணி சார்ந்த, அணுக்கமான உறவு பற்றியும் பேசினார்.

மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் முதல் நூறு நாள் ஆட்சி குறித்து, திரு. அன்வார் பாராட்டு தெரிவித்தார்.

தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் முக்கியத்துவம் பற்றிப் பேசிய திரு. அன்வார், இன அடிப்படையிலான கொள்கைகள் கூடாது என்று வலியுறுத்தினார்.

வசதி குறைந்தவர்களுக்கு, தேவையின் அடிப்படையிலேயே உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.


Top