Images
  • saf uniform (1)
    கோப்புப் படம்: CNA 

3ஆம் காவலர் படைப்பிரிவின் போர்க்காலத் தயார்நிலையைச் சோதிக்கப் பாவனைப் பயிற்சி

சிங்கப்பூர் 3ஆம் காவலர் படைப்பிரிவு, அதன் போர்க்காலத் தயார்நிலையைச் சோதிக்க நடத்திய முக்கிய பாவனைப் பயிற்சியில் சுமார் 800 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொரோனா கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் ஆயுதப் படை பெரிய அளவிலான பயிற்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது.

ATEC எனப்படும் ராணுவப் பயிற்சி மதிப்பீட்டு நிலையம், படை வீரர்களைக் கடைசியாக 9 மாதங்களுக்கு முன் மதிப்பிட்டிருந்தது.

கிருமிப்பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பில் இருந்தபோது, வீரர்கள் சிறிய குழுக்களில் பயிற்சி செய்தனர்.

பின்னர், மதிப்பீட்டிற்குத் தயாராக அவர்கள் மெல்லமெல்ல பெரிய குழுக்களில் பயிற்சி மேற்கொண்டனர்.

ஒரே இடத்தில் கூடும் வீரர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பயிற்சியின்போது வெவ்வேறு குழுக்களுடன் தொடர்பில் இருக்கக்கூடும் என்பதால், ராணுவ மருத்துவர்கள் உள்ளிட்ட சிலருக்குக் கொரோனா கிருமித்தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டது.

கிருமிப்பரவல் சூழலில் பயிற்சி செய்வதில் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ராணுவப் படையினர் அதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றனர்.

அவர்கள் அந்தப் பயிற்சி நடவடிக்கையில், இரண்டாவது ஆக உயர்வான மதிப்பெண்ணைப் பெற்றனர்.

Top