Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2019இல் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்குள் தானியக்கச் சிறு பேருந்துகள்

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், முற்றிலும் தானியக்கமயமான சிறு பேருந்துகள் அடுத்த ஆண்டுக்குள் சேவையாற்றத் தொடங்கும். 

வாசிப்புநேரம் -

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில், முற்றிலும் தானியக்கமயமான சிறு பேருந்துகள் அடுத்த ஆண்டுக்குள் சேவையாற்றத் தொடங்கும்.

அது தொடர்பான இணக்கக் குறிப்பு, இன்று கையெழுத்தானது.

SMRT Services நிறுவனம், 2getthere என்னும் டச்சுத் தானியக்க வாகன உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றோடு இணைந்து, அந்த இணக்கக் குறிப்பில், நன்யாங் பல்கலைக் கழகம் கையெழுத்திட்டது.

அந்தச் சிறு பேருந்தில், 24 பேர் வரை பயணம் செய்யலாம்.

அவர்களில் 8 பேர் அமர்ந்து பயணம் செய்யமுடியும்.

அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோமீட்டர் வரை செல்லும் வாகனம், சாலையில் பதிக்கப்பட்டுள்ள காந்த வில்லைகளின் உதவியோடு பயணத் தடத்தை உணர்ந்துகொள்ளும்.

அதன் பயணத்தட வழிகாட்டி முறை, 1 செண்ட்டிமீட்டர் வரையிலான துல்லியத்தோடு இயங்கும் ஆற்றல் படைத்தது.

ஒப்புநோக்க, GPS எனப்படும் புவியிடங்காட்டி வழிமுறை ஒரு மீட்டர் துல்லியத்தோடு இயங்கக் கூடியது.

தானியக்கப் பேருந்தின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள, நுண்ணொலி ராடார்களும், ஒளியுணர் கருவிகளும் வழியில் உள்ள தடைகளை உணர்ந்து பேருந்தை வழிநடத்தும்.

வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், நடவடிக்கை நிலையத்தின் கண்காணிப்புக்குத் தேவையான படங்களை அனுப்பும்.

தொடக்கமாகத் தானியக்கப் பேருந்து, அரை கிலோமீட்டர் தொலைவுள்ள தடத்தில் சேவையாற்றும்.

நாளடைவில், பல்கலைக் கழக வளாகம் முழுமைக்கும் அதன் சேவை நீட்டிக்கப்படும்.




 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்