Images
  • insta bae
    (படம்: Instagram/baeyyamkeng)

தெருநாய்கள் குறித்த எச்சரிக்கையின் தொடர்பில் குவிந்த விமர்சனம்

தம்பனீஸ் ஸ்ட்ரீட் 45இல் மழையில் 4 தெருநாய்கள் காணப்படும் காணொளியை அந்தக் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங் Instagram-மில் பதிவேற்றியிருந்தார்.

வட்டாரத்தில் காணப்படும் தெருநாய்கள் குறித்து அந்தப் பதிவில் அவர் எச்சரித்திருந்தார்.

நிலைமை குறித்து வேளாண்- உணவு கால்நடை மருத்துவ ஆணையத்திடம் தம்பனீஸ் நகரமன்றம் தகவல் அளித்திருப்பதாகவும் திரு பே குறிப்பிட்டிருந்தார்.

அத்தகைய நாய்களைக் கண்டால் பொதுமக்கள் உடனடியாக ஆணையத்துக்குத் தகவல் அளிக்கும்படி அவர் வலியுறுத்தியிருந்தார். 

தெருநாய்களை நேரில் எதிர்கொண்டால், என்ன செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் அவர் பதிவில் இடம்பெற்றிருந்தது.

அந்தப் பதிவையொட்டி நூற்றுக்கணக்கான கருத்துக்களைப் பொதுமக்கள் திரு பேயின் சமூக ஊடகத்தில் பதிவுசெய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஏன் ஆணையத்தை ஈடுபடுத்த வேண்டும் எனச் சிலர் கேள்வி எழுப்பினர். 

ஆணையம் பிடித்துச் செல்லும் நாய்கள் என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா என்று ஒருவர் கேட்டிருந்தார்.

அந்த நாய்கள் ஆபத்தற்றவை எனக் குறிப்பிட்ட இணையவாசி ஒருவர், அவற்றின் உயிரை எடுப்பது முறையா என்றார்.

விலங்கு நலத் தொண்டூழிய அமைப்பு ஒன்றில் சேவையாற்றுவதாகச் சொன்ன அவர், பொதுமக்களியையே அதன் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார். 

இன்னொருவர், தெருநாய்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றும் முயற்சிகளை எடுக்கலாம் என்றார். 

அத்தகைய கருத்துகளுக்குத் திரு பே நேற்று பதிலளித்தார்.

குடியிருப்பாளர் ஒருவரே தமக்குத் தெருநாய்களின் காணொளியை அனுப்பியதாகச் சொன்ன திரு பே, நகர மன்றத்துக்கும் அதன் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சில மின்னஞ்சல்கள் வந்ததாகக் குறிப்பிட்டார். 

தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக, மக்களுக்கு நம்பிக்கையளிப்பது தமது கடமை என்றும் அவர் கூறினார். 

குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை முன்னிட்டு தாம் ஆணையத்தின் ஆலோசனைகளைப் பகிர்ந்துகொண்டதாகச் சொன்னார் திரு பே.

தெரு நாய்களைக் கொல்வதை தம்பனீஸ் ஆதரிக்காது என்று அவர் உறுதியளித்தார். 

அத்தகைய நாய்களுக்குத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று திரு பே தெரிவித்தார். 

தெருநாய்கள் குறித்து இத்தனை குடியிருப்பாளர்கள் அக்கறை கொண்டிருப்பது தமக்கு மனநிறைவு அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

 

Top