Images
  • bedok
    (படம்: Singapore Police Force)

பிடோக் அடகுக்கடை கொள்ளை: சந்தேக நபரின் படம் வெளியிடப்பட்டது

(வாசிப்பு நேரம்: சுமார் 1 நிமிடம்)

பிடோக் வட்டாரத்தின் அடகுக்கடை ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ஆடவரின் புகைப்படத்தை சிங்கப்பூர்க் காவல்துறையினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 2 மணியளவில் பிடோக் நோர்த் ஸ்டிரீட் 1, புளோக் 213இல் அமைந்துள்ள ValueMax அடகுக்கடையில் ஆடவர் ஒருவர் திருட முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஆடவர் கையில் பெரிய வெட்டுக் கத்தி வைத்திருந்ததாகக் கூறப்பட்டது.

முகமூடி அணிந்தவாறு, பெரிய வெட்டுக் கத்தியுடன் அந்த ஆடவர் கடைக்குள் நுழைந்ததாக அடகுக்கடை நிர்வாகி கூறினார்.

வெட்டுக் கத்தியைக் கடையிலிருந்த கண்ணாடிமீது அந்த ஆடவர் மோதியபோது, எதிர்பாரா விதமாக அது இரண்டாய் உடைந்தது.

உடனே அந்த ஆடவர், உடைந்த கத்தியை எடுத்துக்கொண்டு தப்பியோடினார்.

தப்பியோடிய ஆடவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்றும் அந்த ஆடவர் தம் கைகளில் உறையணிந்து, கறுப்புநிற ஆடையில் காணப்பட்டார் என்றும் அடகுக்கடை நிர்வாகி கூறினார்.

அச்சம்பவத்தைப்பற்றி விவரம் அறிந்தவர்கள் 1800-255-00-00 என்னும் எண்ணில் காவல்துறையைத் தொடர்புகொள்ளலாம்.

அல்லது www.police.gov.sg/iwitness என்னும் இணையத்தளத்தில் விவரங்களைப் பதிவு செய்யலாம்.

காவல்துறையிடம் வழங்கப்படும் எல்லாத் தகவல்களும் ரகசியமாக வைத்திருக்கப்படும்.
 

Top