Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாரதியின் எழுச்சிமிக்கக் கவிதைகளை இளையர்களிடம் கொண்டுச் சேர்க்க முயலும் கவிமாலை அமைப்பு

பாரதியின் எழுச்சிமிக்கக் கவிதைகளை இளையர்களிடம் கொண்டுச் சேர்க்க முயலும் கவிமாலை அமைப்பு

வாசிப்புநேரம் -

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளையும், பாடல்களையும் இன்றைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிங்கப்பூரின்
கவிமாலை அமைப்பு புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

தேசிய நூலகத்துடன் இணைந்து "மறைந்தும் நம் நினைவில் பாரதி" என்ற கருப்பொருளில் "நின்னைச் சரணடைந்தேன்" என்ற தலைப்பில் காணொளிகளை வெளியிடுகிறது கவிமாலை.

அந்தப் புதிய முயற்சி பற்றி மேலும் தெரிந்துகொள்ளக் கவிமாலை அமைப்பின் தலைவி இன்பாவிடம் "செய்தி" பேசியது.

எப்படி இந்த யோசனை வந்தது ?

இந்த ஆண்டு பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள், அவரின் பல கவிதைகளும் பாடல்களும் இப்போதும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

பாரதி தொடர்பாகப் பல நிகழ்ச்சிகள் தற்போது நடத்தப்படுகின்றன. இந்தத் தலைமுறை இளையர்களுக்கு பாரதியின் எழுச்சிமிக்க, கவிதைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

மக்களுக்கு பாரதியின் கவிதைகள் எப்படி உதவியாக இருக்கின்றன, அவர்கள் சவால்களைச் சமாளித்து முன்னேறியது எப்படி என்று சிலரின் அனுபவங்களைக் காணொளி வாயிலாக வெளியிடத் திட்டமிட்டோம்.

முன்னர், COVID-19 ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு வர "வல்லமை தாராயோ" என்ற தலைப்பில் சொந்த அனுபவங்களை காணொளிகள் மூலம் வெளியிட்டோம்.

அது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் அதே பாணியில் இப்போது பாரதியின் கவிதைகள்.

யாரெல்லாம் கலந்துகொள்ளலாம் ?

காணொளிகள் தொடர்பாக சமூக ஊடகங்கள் வழி நாங்கள் தகவல் வெளியிட்டோம். அதற்கு நல்ல ஆதரவு கிடைத்தது.

மாணவர்கள், இளையர்கள், பெண்கள், மூத்தோர், உள்ளூர் பிரபலங்கள் என அனைவரும் பாரதியின் கவிதையால் ஏற்பட்ட தாக்கத்தையும் தங்கள் சொந்த அனுபவங்களையும் எங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம்.

காணொளி எப்படி தேர்தெடுக்கப்படும் ?

ஒருவர் காணொளிகளைச் சமர்பிப்பதற்கு முன்பு முதலில் எங்களுக்கு அவர் பாரதியின் கவிதையால் ஏற்பட்ட சொந்த அனுபவங்களை எழுதி அனுப்ப வேண்டும்.

அதன் பின்னர் எந்த அனுபவம் இளையர்களை ஈர்க்கும் விதமாக இருக்கிறது என்பதை தெரிவு செய்து அதைக் காணொளியாக மாற்றித் தரச்சொல்லுவோம்.

எத்தனை காணொளிகள் வெளியிடப்படும்?

செப்டம்பர் 11ஆம் தேதியிலிருந்து இம்மாத இறுதி வரை எங்கள் சமூக வலைத்தளங்களிலும் Youtube பக்கத்திலும் சுமார் 20 காணொளிகள் வெளியிடப்படுகின்றன.

பாரதிக்காக வெளியிடப்படும் காணொளியில் உள்ளூர் நட்சத்திரம் வடி PVSS இன் காணொளியும் உள்ளது.

பாரதியார் பாடல்கள் எளிமையாக இருக்கும் சிறு வயதில் இருந்தே அவற்றைப் படிக்கத் தொடங்கிவிட்டேன்

பாரதியின் பாடலில் உள்ள கருத்து உலகளாவியது, எல்லாக் காலத்திற்கும் பொறுத்தமானது. அதனால்தான் அவர் மறைந்த 100 ஆண்டுகளுக்கு பிறகும் அவரின் பாடல்கள் பிரபலமாக உள்ளன.

தமிழ் உள்ளவரை பாரதியின் பாட்டிற்கு அழிவில்லை, அவரின் பாடல்களைக் கேட்க நாம் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

தமிழர்கள் பாரதியின் பாடல்களைத் தொடர்ந்து படித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திரு. வடி PVSS.

சவால்களாலும் சோதனைகளாலும் இளையர்கள் துவண்டு போகாமல் இருக்க வேண்டும் என்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்றார் இன்பா.

பாரதியின் கவிதைகள் எப்படி நாம் உத்வேகத்துடன் செயல்பட ஊக்கம் தரும் என்பதை இளையர்களுக்குக் காட்ட இதை ஒரு வாய்ப்பாகவும் பார்க்கின்றோம் என்றார் அவர்.

காணொளிகளைப் பார்க்க: https://www.youtube.com/channel/UCfVz64TOzmi5-imdVy7jZLA  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்