Images
  • Bionix
    (Facebook/SG Road Vigilante)

Bionix கவச வாகன விபத்து தொடர்பான படங்களை வெளியிட்ட தேசிய சேவையாளர்கள் ஐவர் மீது காவல்துறையிடம் புகார்

Bionix கவச வாகனம் விபத்துக்குள்ளான படங்களை வெளியிட்டதன் தொடர்பில் முழுநேர தேசிய சேவையாளர்கள் ஐந்து பேர் மீது, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளது.

கடந்த வாரம் சிங்கப்பூர் ஆயதப் படைப் பயிற்சி வளாகத்தில் நடந்த விபத்தைப் படம்பிடித்து தேசிய சேவையாளர்கள் ஐவரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உள்ளனர்.

பகிரப்பட்ட படத்தில் Land Rover வாகனம் மீது Bionix கவச வாகனம் ஏறி நிற்பதும், அதற்கு பின்னால் மருத்துவ அவசர சேவை வாகனமும், குடிமைத் தற்காப்புப் படை வீரரும் இருப்பது பதிவாகியுள்ளன.

ஜாலான் மூராயில் நேர்ந்த விபத்தில் முழுநேர தேசிய சேவையாளர் லியு காய் மாண்டார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற தேசிய சேவையாளர்கள் இருவர் அனுமதியின்றிப் படங்களை எடுத்து, அவற்றை WhatsApp மூலம் சக தேசிய சேவையாளர்களிடம் பகிர்ந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

பின்னர் அந்தப் படங்களில் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது.

அனுமதியற்ற அந்தச் செயலைக் கடுமையானதாய்க் கருதுவதாகக் கூறிய குடிமைத் தற்காப்புப் படை, சம்பந்தப்பட்ட ஐவர் மீதும் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

படங்கள் வெளியானதன் தொடர்பில் தற்காப்பு அமைச்சு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.  

Top