Images
  • bukit panjang locker (1)
    படம்: Kamini Devadass

இணையத்தில் வாங்கும் பொருட்களைப் புளோக்குகளுக்கு அருகில் பெற்றுக்கொள்ளும் வசதி 2 வட்டாரங்களில் அறிமுகம்

இணையத்தில் வாங்கும் பொருட்களை வீடுகளுக்கு அருகில் உள்ள பாதுகாப்புப் பெட்டிகளில் பெறுவதற்கான வசதி முதல்முறையாகப் பொங்கோல், புக்கிட் பாஞ்சாங் வட்டாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வட்டாரங்களைச் சேர்ந்த 78,000 குடியிருப்பாளர்கள் அதன்வழி பயன்பெறுவர் என்று தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

24 மணி நேரமும் பாதுகாப்புப் பெட்டிகளைக் குடியிருப்பாளர்கள் பயன்படுத்தலாம். "Locker Alliance" என்று அந்தத் திட்டம் அழைக்கப்படுகிறது.

தாய்லந்து, ஹாங்காங், இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புப் பெட்டி நிறுவனங்களோடு புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது.

பாதுகாப்புப் பெட்டிகளை நிர்வகிப்போர், தளவாடச் சேவை நிறுவனங்கள், மின்னிலக்கச் சந்தைகள் எனப் பலதரப்பை ஒருங்கிணைக்கும் தளமாக இந்தத் திட்டம் உள்ளது என்று ஆணையத்தின் அறிக்கை தெரிவித்தது.

இரண்டு வட்டாரங்களிலும் 60க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பெட்டிகள் பொருத்தப்படும்.

கழக புளோக்குகளின் 250 மீட்டர் சுற்றுவட்டத்துக்குள் அந்தப் பெட்டிகள் அமைந்திருக்கும்.

ஓராண்டுக்குத் திட்டம் நடப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்பாளர்கள் எந்நேரமும் இணையத்தில் வாங்கிய பொருட்களை அந்தப் பெட்டிகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். இணைய விற்பனையாளர்களிடம் பொருட்களைத் திரும்பக் கொடுக்கவும் அந்தப் பெட்டிகள் உதவும்.

புதிய திட்டத்தால், பொருட்களை விநியோகம் செய்யும் முறை மேலும் மேம்படும் என்றும் நம்பப்படுகிறது.


Top