Images
  • Celebrating SG Women

பெண்கள் எதையும் விட்டுக்கொடுக்காமல் சாதிக்கலாம் என்று நிரூபிக்கும் நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் #celebratingSGwomen


#celebratingSGWomen

சிங்கப்பூரில் ஆரம்ப காலத்திலிருந்து பெண்களின் முன்னேற்றமும் பங்களிப்பும் சமுதாயத்தைச் செதுக்க உதவியிருக்கின்றன.

சிங்கப்பூரில் பெண்கள், சமுதாய, அரசாங்க ஆதரவோடு மிகச் சிறந்த முன்னேற்றம் கண்டுவந்துள்ளனர்

இருப்பினும் பெண்கள் குறித்த சமுதாயக் கண்ணோட்டம் மேலும் மாறவேண்டும். அதன் மூலமாகவே சமத்துவமிக்க ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும்.

அதை மாற்றுவதில் பெண்களுக்கும் முக்கிய பங்குண்டு. பொறுப்புகளிலிருந்து விடுபட்டுத் தான் ஒரு பெண் சாதிக்க முடியும் என்பதில்லை.


குடும்பம், பணியிடம் - இவற்றின் புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இருந்தால் ஒரு பெண் உயர் பொறுப்புகளை வகிப்பது சாத்தியமே என்கிறார், திருவாட்டி SP மீனாட்சி.

மீனாட்சி, Citi Private Bank APAC நிறுவனத்தில் 20 ஆண்டுகளாகப் பணிபுரிகிறார். நிறுவனத்தில் நிர்வாகியாகத் தொடங்கித் தற்போது, மூத்த துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.


19, 17, 11 வயதில் மூன்று பிள்ளைகளுக்குத் தாய். இவரது வெற்றிப் பயணத்தில் பல சவால்கள் இருக்கத்தான் செய்தன.

அந்தக் காலக்கட்டத்தில் என் மேலாளர்கள் என் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஆதரவாக இருந்தனர். அது மேலும் அதிகம் சாதிக்கத் தூண்டுகோலாக அமைந்தது.

என்று கூறும் மீனாட்சி, தமது நினைவுகள் சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.

மூன்றாவது பிள்ளை பிறந்தபோது, நிர்வாகிகள் நீக்குப்போக்குடன் வேலை செய்ய அனுமதித்தனர்.

கட்டாயமாக விடுப்பு எடுக்கவேண்டிய வேளைகளில் இவருக்குப் பணியிடத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்பட்டன.

சிரமமான நேரங்களில், என்னுடன் பணியாற்றியவர்களும், எனது வழிகாட்டிகளாக இருந்தவர்களும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். உதவிக் குறிப்புகள் அளித்தனர். எனது மேலாளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து அதிகாரம் அளித்தனர். 

அந்தக் காலக்கட்டத்தில், குடும்ப ஆதரவும் தளரவிடாமல் தூக்கி நிறுத்தியதை நினைவுகூர்ந்தார் மீனாட்சி.

வேலையில் இருந்த என் கணவர், அதை விட்டுவிட்டுத் தொழில் தொடங்கி அதில் ஈடுபட்டார். இதனால் பிள்ளைகளுடன் அவருக்கு இருந்த பிணைப்பு அதிகரித்தது. பிள்ளைகளின் கல்வி, வளர்ச்சி ஆகியவற்றில் அவர் பெரும் பங்காற்றத் தொடங்கினார். ஒரு குடும்பப் பெண்ணாக அது எனக்குப் பெருமளவில் நிம்மதியளித்தது.

"வேலை நிமித்தமாக வெளியூர் செல்லவேண்டியிருந்த சூழல்களில், எனது தாயாரும், கணவரது குடும்பமும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள மிகவும் உதவினர். அதனால் மன நிம்மதியுடன் முழுமையாக வேலையில் ஈடுபட முடிந்தது."


மீனாட்சி 20 ஆண்டுகளில், தமது நிறுவனத்தின் பல பிரிவுகளுக்கு மாறியிருக்கிறார். அதன் மூலம் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கிறார்.

நம்பிக்கையுடன் முன்னோக்கி நடைபோட அவை வழிவகுத்ததாகச் சொன்னார் அவர். தம்மைப் போல பெண்கள் சவால்களைத் தாண்டி சாதிக்க உதவ வேண்டும் என்பது இவரது விருப்பம். அதற்கு நிறுவனத் திட்டங்கள் வழியமைத்துக் கொடுத்தன.


இவரது நிறுவனத்தில், ஊழியரின் சூழலுக்கு ஏற்றவகையில் வழிகாட்டித் திட்டங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.

அது தவிர, ஆண்-பெண் சமத்துவத்தை ஆதரிக்கவும், பெண்களுக்கு ஆதரவு அளிக்கவும் பல திட்டங்கள் நடப்பில் உள்ளன.


Citi Women Singapore என்ற திட்டத்தின் செயற்குழுவில் மீனாட்சி ஒரு முக்கிய உறுப்பினர். அதன் கீழ் பெண்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

வேலையிடத்தில் பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் IamRemarkable திட்டம், பெண்கள் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொள்ளவும், சவால்களைப் பகிர்ந்துகொள்ளவும், இயல்பாகப் பழகவும் வழியமைத்துக்கொடுக்கும் "Lean in" திட்டம், பெண்களின் நிபுணத்துவ மேம்பாட்டுக்கான சிறப்பு வழிகாட்டித் திட்டம், பெண்களை ஊக்குவிக்கும் தலைமைத்துவத் திட்டம், பணியிலிருந்து விலகிய பெண்களை மீண்டும் வேலைக்குத் திரும்ப வைக்கும் இயக்கம் ஆகியவை அவற்றுள் சில.

ஆண் பெண் சமத்துவம் வீட்டில் தொடங்குகிறது என்பது மீனாட்சியின் நம்பிக்கை.

பல வழிகளில் என் வேலையிட வெற்றிக்கு என் கணவர் முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.

பல நேரங்களில் வேலை தொடர்பான சிக்கல்களுக்கு நிதானமாக முடிவெடுக்கத் அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார்.

மீனாட்சி நிறுவனத்தில் தனிப்பட்ட வகையில் பெண்களுக்காக முன்னெடுத்துச் சென்ற திட்டத்துக்கு அதுவே உந்துதலாக அமைந்தது.

"Male Allyship Initiative - ஓர் ஆணின் ஒத்துழைப்பும், ஆதரவும் இன்றி பெண் முன்னேறுவது சிரமம். அதைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது."

ஆண்கள் பெண்களுக்குச் சம வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்க உதவவேண்டும்; பெண்களின் முன்னேற்றத்துக்குப் பங்களிக்க வேண்டும்; பெண்ணின் முன்னேற்றம் என்பது ஆண்களையும் உள்ளடக்கியது. அதை வலியுறுத்தி வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கிறது இந்தத் திட்டம். 

"தனியாக நின்று தான் சாதிக்கவேண்டும் என்பதில்லை. வேலையிலும் வாழ்க்கையிலும் சமநிலையை எட்ட விரும்பும் ஒவ்வொரு பெண்ணும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று, அனைத்தும் கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது."


குடும்பத்தினருடன் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது, அவர்களுடன் கலந்துரையாடுவது, மாற்று வழிகளைச் சிந்திப்பது ஆகியவை சவால்களை எளிமையாக்கும் என்பதை தமது அனுபவத்தில் உணர்ந்ததாகச் சொல்கிறார் இவர்.

மேலும் உடன் பணியாற்றுபவர்கள், குடும்ப உறுப்பினர்கள் கூறும் யோசனைகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டதாகச் சொன்னார் இவர்.


வார இறுதிகள் முழுமையாகக் குடும்பத்துக்கு என்று ஒதுக்குவேன். அது என் வாரநாள்களில் திறம்படப் பணியாற்ற ஊக்குவிக்கிறது. யோகா, இசை, நடனம் என்று எனக்கென சொந்த நேரம் ஒதுக்கவும் தவறுவதில்லை.

கடுமையாக உழைப்பதைவிட திறமையுடன் உழைப்பதில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கிறார் இவர். பொறுப்புகளை நிறைவேற்றத் தேவையான திறன்கள் என்ன என்பதைக் கண்டறிந்து, முன்கூட்டியே திட்டமிட்டு, வளங்களையும், நிறுவனத்தின் கட்டமைப்பையும் முழுமையாகப் பயன்படுத்தி பணியைத் திறம்பட முடிக்கிறார்.

இவர் பெண்களுக்குச் சொல்ல விரும்புவது....

உங்கள் பலம், பலவீனம் என்ன என்று அறிந்துகொள்ளுங்கள், நீங்கள் யாரென்று உணருங்கள், செய்வதை விருப்பத்தோடு செய்யுங்கள்......எதையும் விட்டுக்கொடுக்காமல் சாதிக்கலாம்!


Top