Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பேருந்து ஓட்டுநர் பணி எப்படிப்பட்டது என்று யோசித்ததுண்டா?

ஒரு பேருந்து ஓட்டுநர் என்றால் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கிவிடுவதுதான் அவர்கள் வேலை என்று நினைத்திருப்போம். 

வாசிப்புநேரம் -
பேருந்து ஓட்டுநர் பணி எப்படிப்பட்டது என்று யோசித்ததுண்டா?

படம்: Channel NewsAsia

ஒரு பேருந்து ஓட்டுநர் என்றால் பயணிகளை ஏற்றிச்சென்று இறக்கிவிடுவதுதான் அவர்கள் வேலை என்று நினைத்திருப்போம். அதையும் தாண்டி அவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

பெஞ்சமின் லிம்... வயது 23. பேருந்து ஓட்டுநர் பணியைத் தெரிவுசெய்வதில் மற்ற இளம் சிங்கப்பூரர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்குகிறார்.  

லிம் முதலில் பேருந்து ஆர்வலர். அதுவே ஓட்டுநர் தொழிலை ஏற்க அவரைத் தூண்டியது. 22 வயதில் தம்பனீஸ் பேருந்து முனையத்தில் பணியைத் தொடங்கினார்.

ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது அவர் சொல்வது... பேருந்து ஓட்டுநரின் பணி சுமுகமான ஒன்றல்ல.

"மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள் இது மிகவும் எளிதான பணி, ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குப் பயணிகளை ஏற்றிச்சென்று விடுவது அவ்வளவுதான் என்று. ஒவ்வொரு நாளும் சவால்மிக்கது," என்கிறார் லிம்.

16 வயதில் வேரூன்றிய ஆர்வம். திரையரங்குகள், கடைத்தொகுதிகள்... இப்படிப் பொதுவாகப் பதின்ம வயதினர் நாடிச் செல்லும் இடங்களை இவர் நாடவில்லை.

பேருந்துகளில் ஏறி, பல இடங்களில் இறங்கி, தீவு முழுதும் வெவ்வேறு பாதைகளைத் தெரிந்துகொண்டார். தொழில்நுட்பக் கல்வியை முடித்தார். தேசியச் சேவையை முடித்தார்.

பேருந்து ஓட்டுநராகப் பதிந்துகொண்டார். இது பெற்றோருக்கு மனநிறைவைத் தரவில்லை.

"கடினமான வேலை. நன்கு யோசித்து முடிவெடுக்கச் சொன்னார்கள்.ஆனால் நான் என் முடிவில் உறுதியாய் இருந்தேன்," என்றார் லிம்.

அனுபவம் இல்லை. அதனால் பயிற்சியின்போது அதிகமாகவே சிரமப்பட்டார். ஆனாலும் மனம் தளரவில்லை. எட்டு மணிநேர வேலை. ஐந்து முறை பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

அதோடு, ஓட்டுநர் என்பதைத் தாண்டி எத்தனையோ பொறுப்புகள்..

பேருந்து முனையத்திலிருந்து கிளம்புவதற்குமுன் பேருந்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத்தான் கிளம்ப வேண்டும்.

பயணிகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் லிம்மின் முக்கிய எண்ணம்.

பயணிகளின் வசதிக்காக அவர்களை ஏற்றும்போதும் இறக்கிவிடும்போதும் சின்னச்சின்ன அம்சங்களைக்கூட பார்த்துப் பார்த்து செய்கிறார்.

பொதுவாக ஒரு பேருந்து ஓட்டுநர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய பாதைகளைவிட அதிகமாகவே இவருக்குத் தெரிந்திருக்கிறது.

பயணகளைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. காணாமல் போகும் பொருட்கள் பற்றிய புகார்கள். முதியோரின் தேவைகள்.. இப்படி எத்தனையோ.. இதையெல்லாம் விரும்பிச் செய்கிறார். அதுவே லிம்மின் தனித்தன்மை.

தனக்கிருக்கும் ஆர்வத்தை மற்றவர்களிடமும் கொண்டுசெல்ல எண்ணுகிறார் லிம். சிறந்த சேவை வழங்கும்போது பயணிகளிடமிருந்து கிடைக்கும் புன்னகை, பாராட்டு..இதுதான் தன்னை இந்தப் பணியில் நீடிக்கச் செய்வதாகக் கூறும் லிம் ஓட்டுநர் பணியில் அடுத்த நிலைக்குச் செல்ல விரும்புகிறார்.

இளம் சிங்கப்பூரர்கள் பேருந்து ஓட்டுநர் தொழிலை ஏற்க வேண்டும். தன்னைப்போல் அவர்களும் மனநிறைவு காணவேண்டும். இதுதான் லிம்மின் விருப்பம்.

லிம் போன்றவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள சேனல் நியூஸ் ஏஷியாவின் Don't Make Us Invisible நிகழ்ச்சியை திங்கட்கிழமைகளில் இரவு 8 மணிக்குக் காணலாம். 



விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்