Images
  • Jho Low
    (கோப்புப் படம்: AFP/Getty Images/Taylor Hill)

1MDB ஊழல்: ஜோ லோவுக்கு சீனாவில் அடைக்கலம் கொடுக்கப்படவில்லை

1MDB ஊழலில் மிக முக்கியமான சந்தேக நபராகக் கருதப்படும் ஜோ லோவுக்கு (Jho Low)அடைக்கலம் கொடுக்கவில்லை என்று, சீனா தெரிவித்துள்ளது.

ஜோ லோ, மக்காவ்வில் ஒளிந்திருப்பதாக மலேசியக் காவல்துறை நேற்றுத் தெரிவித்தது. 

ஆனால், சீனா அதை மறுத்துள்ளது.

சீனா, வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு ஒருபோதும் அடைக்கலம் கொடுக்காது என்றும் மலேசியா ஆதாரம் இல்லாமல் பேசுவதாகவும் மலேசியாவுக்கான சீனத் தூதரகப் பேச்சாளர் கூறினார்.

ஜோ லோ தொடர்பாக மலேசியக் காவல்துறை கொடுத்த விவரங்களைக் கொண்டு, அவரைத் தீவிரமாய்த் தேடியதாகப் பேச்சாளர் தெரிவித்தார்.

துரதிருஷ்டவசமாக, ஜோ லோ பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

1MDB நிதி முறைகேட்டைத் திட்டமிட்டு வழிநடத்தியவர் ஜோ லோ என்று சந்தேகிக்கப்படுகிறது.

முறைகேடாகப் பெற்ற நிதியைக் கொண்டு பல சொகுசுப் பொருள்களை வாங்கிக் குவித்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை ஜோ லோ எதிர்நோக்குகிறார்.

1MDB அரசாங்க நிதி நிறுவன ஊழலில் சம்பந்தப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு நேற்று முன்தினம் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜோ லோ இதற்கு முன்னர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், சீனா உள்ளிட்ட பல இடங்களில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அவர் தற்போது மக்காவ்வில் உள்ளதாக மலேசியக் காவல்துறைத் தலைவர் அப்துல் ஹமித் நேற்றுத் தெரிவித்திருந்தார்.

Top