Images
  • master
    (படம்: ActorVijay / Twitter)

பொங்கலையொட்டி வெளிவரும் 'மாஸ்டர்' திரைப்படம்...பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகள், ரசிகர்கள்

சிங்கப்பூரில் பொங்கலையொட்டி, முன்னணி நட்சத்திரங்கள் விஜயும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படம் வெளிவரவிருக்கிறது.

கடந்த ஆண்டு கிருமித்தொற்று தொடங்கிய பிறகு, பிரபலங்கள் நடித்து வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் இது.

'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளிவரவிருந்தது.

ஓராண்டு காலமாகக் காத்திருக்கும் ரசிகர்கள் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நான் விஜயின் தீவிர ரசிகர். அவருடைய ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் நான் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பதுண்டு. ஓராண்டு காத்திருந்த பிறகு, திரையரங்கத் திரையில் நாளை விஜயைப் பார்க்கமுடியும் என்று எண்ணும்போது.. .உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை. நான் இரண்டு வாரங்களுக்கு முன்பே, வேலையில் விடுப்புக் கேட்டு எடுத்துவிட்டேன்.

என்றார் கரீம் கபீர்.

வழக்கமாக ஆண்டுதோறும் விஜய் நடிப்பில் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். கடந்த ஆண்டு அவ்வாறு நடக்கவில்லை. உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் அனைவரும் கவலைப்பட்டனர். இருப்பினும், இவ்வாண்டைச் சிறப்பாகத் தொடங்கும் வகையில், பொங்கலை முன்னிட்டு அந்தப் படம் வெளியாகிறது. படத்தில் விஜய் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியும் நடிப்பது எங்களுக்கு ஒரு பரிசாக அமைந்துள்ளது.

- சைமன்

திரைப்படம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே, நான் காட்சி நேரங்களுக்காகக் காத்திருந்தேன். அதைக் கண்டிப்பாக நாளை பார்க்கவேண்டும் என்று தீர்மானம் கொண்டுள்ளேன்.

- கார்த்திகா

சிங்கப்பூரில் 'மாஸ்டர்' திரைப்படம் Cathay Cineplexes, Golden Village, Carnival Cinemas ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்படவிருக்கிறது.

திரைப்படத்தின் முதல் காட்சி, இன்று பின்னிரவு இடம்பெறும்.

வழக்கமாக Carnival Cinemas திரையரங்கில், திரைப்படத்தின் முதல் காட்சி இடம்பெறும் என்பதால், ரசிகர்கள் அனைவரும் அதன் நுழைவுச்சீட்டுகளைப் போட்டி போட்டுக் கொண்டு வாங்குகின்றனர்.

ரசிகர்கள் அதிகமானோர் திரையரங்கின் இணையப்பக்கத்தை நாடியதால், அது செயலிழந்து முடங்கியது.

இணையப்பக்கம், செயலி ஆகியவற்றை அணுகுவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், நான் எப்படியோ 3 நுழைவுச்சீட்டுகளை வாங்கிவிட்டேன். அதில் எனக்கு மிகவும் திருப்தி.

என்று கூறினார் புவனேஸ்வரன்.

கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால், திரையரங்கில் ஒரு நேரத்தில் 150 பேர் மட்டுமே இருக்கமுடியும். இதனால், திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டுகள் விரைவாக விற்றுத் தீர்கின்றன.

என்று Carnival Cinemas கூறியது.

எங்கள் திரையரங்கில் வழக்கமாகக் கிட்டத்தட்ட 1,000 பேர் வரை அமரலாம். கட்டுப்பாடுகளால், பெரும்பாலான வாடிக்கையாளர்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

என்று அது வருத்தம் தெரிவித்தது.

கடந்த ஆண்டு பிற்பாதியிலிருந்து சிறிய அளவிலான தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே திரையிட்ட Golden Village திரையரங்கும், 'மாஸ்டர்' திரைப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்ததாகச் சொன்னது.

விஜய், விஜய் சேதுபதி ஆகியோரின் ரசிகர்கள் பலரும் அந்தப் படத்தைத் திரையரங்கில் பார்ப்பார்கள் என எதிர்பார்க்கும் Cathay Cineplexes நிறுவனம், அதற்குத் தேவையான திரையரங்குகளை ஒதுக்கப் போவதாகக் கூறியது.

கடந்த ஆண்டு வெளியாக வேண்டிய பல திரைப்படங்கள், கிருமிப்பரவலால் நின்றுபோயின. பிரபல நடிகர்கள், இயக்குநர்களின் திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகும், வர்த்தகம் மேம்படும் என்று திரையரங்குகள் நம்பிக்கை கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், எதிர்வரும் மாதங்களில் கூடுதலான திரைப்படங்கள் வெளியாகும் என்பது எதிர்பார்ப்பு.

பொங்கல் அன்று, நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 'ஈஸ்வரன்' திரைப்படமும் சிங்கப்பூரில் வெளியிடப்படும். 

Top