Images
  • cladding (1)
    (படம்: Junn Loh) 

கட்டட மேல் தகடுகள் தொடர்பான விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படும் : குடிமைத் தற்காப்புப் படை

தீப் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய பரிந்துரைகள் சிலவற்றை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு புதிய கட்டடத் திட்டத்திலும் பயன்படுத்தப்படும் மேல் தகடுகளின் (Cladding) மாதிரிகளைச் சோதிப்பது, வேலையிடங்களில் கட்டாயச் சோதனை-ஆகியவை அவற்றில் அடங்கும்.

கட்டடங்களின் வெளிப்புறத்தில் மேல் தகடுகள் பொருத்தப்படும் முறையை மறுஆய்வு செய்த குழு அந்த நடைமுறையிலுள்ள சில முக்கிய அம்சங்களை அடையாளங்கண்டுள்ளது.

அரசாங்க அமைப்புகள், சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், கட்டுமானத் துறை நிபுணர்கள்-ஆகியோரைக் கொண்டது அந்தக் குழு.

குழு முன்வைத்த பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டின் முதற்பாதிக்குள் அவை நடப்புக்கு வரும் என்றார் அவர்.

மேல் தகடுகளின் தரத்தை நிர்ணயிக்கும் சான்றிதழைப் பெறுவதற்கான நிபந்தனைகள் மேம்படுத்தப்படும் என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

வருடாந்தரத் தொழிற்சாலைச் சோதனை, உற்பத்திச் செயல்முறைச் சோதனை, தணிக்கை நடவடிக்கைகள் போன்றவை அதில் அடங்கும்.

கடந்த செப்டம்பர் மாதம், டோ குவான் ரோட்டில் உள்ள கட்டடம் ஒன்றில் தீ மூண்டது.

பாதுகாப்பற்ற வெளிப்புற மேல் தகடுகள் தீக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.  

Top