Images
  • eye

கண்களுக்குப் பொருத்தமற்ற விழியொட்டுவில்லைகள் கண்களை நிரந்தரமாக பாதிக்கக்கூடும்

கிட்டப் பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மூக்குக் கண்ணாடி அணிவதற்கு பதிலாக கண்ணில் ஒட்டிக்கொள்ளும் விழியொட்டு வில்லைகளைப் (Contact lenses) பொருத்திக் கொள்வதுண்டு.

ஆனால், ஒவ்வொரு முறை அந்த வில்லைகளை வாங்கும்போதும் அவை அவரவர் கண்களுக்குப் பொருத்தமானவைதானா என்பதை உறுதி செய்வது அவசியம் என்கின்றனர் கண் மருத்துவர்கள்.

பொருத்தமற்ற விழியொட்டு வில்லைகளால், கண் விழித்திரைக்குப் போதுமான உயிர்வாயு கிடைக்காமற் போகக்கூடும்.

அத்தகைய நிலை தொடர்ந்தால், பார்வையே பறிபோகக் கூடும்.

சுமார் 10 ஆண்டுகளாகக் கடைக்குச் சென்று மற்ற பொருள்களை வாங்குவது போலவே விழியொட்டுவில்லைகளை வாங்கி வந்தார் குமாரி ஜாஸ்மின் சீ.

அண்மையில் அவருக்கு கண் விழித்திரையில் பிரச்சினைகள் தோன்றத் தொடங்கின... காரணம் அவர் அணிந்து வந்த விழியொட்டுவில்லைகள் கண்களில் சரியாகப் பொருந்தாமற்போனது..

கண்களைப் பரிசோதிக்காமல் விழியொட்டுவில்லைகளை வாங்கும் போது விழிகளில் அவை சரியாகப் பொருந்தாமல் நாளடைவில் பிரச்சினை உருவாகிறது.

கண்களைப் பரிசோதிக்காமல் விழியொட்டுவில்லைகளை விற்பனை செய்வது சிங்கப்பூரில் பழக்கமாக இருந்து வருவதை சேனல் நியூஸ்ஏஷியா ஆராய்ந்து வந்தது.

சிங்கப்பூரில் விழியொட்டுவில்லைகளை விற்கும் முன் அவை வாடிக்கையாளருக்குப் பொருத்தமாக உள்ளனவா என்பதைச் சரி பார்ப்பது கட்டாயம். ஆனால் அந்த பழக்கத்தைப் பின்பற்றும் கடைகள் குறைவு.

சேனல் நியூஸ்ஏஷியா சென்ற 4 கடைகளில் ஒரு கடை மட்டுமே, விழியொட்டுவில்லைகளை விற்கும் முன் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை நிருபரிடம் வலியுறுத்தியது.

சிங்கப்பூரில் 1,180 உரிமம்பெற்ற விழியொட்டுவில்லை விற்பனையாளர்கள் உள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

கடந்த மூவாண்டுகளில் முறையாக விழியொட்டுவில்லைகளை விற்பனை செய்யத் தவறிய 12 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.

அவர்களுக்குச் சுமார் 1,500 வெள்ளியிலிருந்து 4,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது. 

Top