Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிப்பதற்கு உங்கள் வீடு எப்படி உதவும்? இதோ சில வழிகள்...

ஓய்வுக்காலச் சேமிப்பை அதிகரிப்பதற்கு உங்கள் வீடு எப்படி உதவும்? இதோ சில வழிகள்...

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில், பொருளியல் நலிவுற்றிருக்கும் சூழலில் ஓய்வுக்காலத்திற்கான சேமிப்பைப் பற்றி யோசிப்பது பலருக்கும் சவாலாக இருக்கும்.

ஓய்வுக்காலத்திற்காகச் சேமிப்பதற்கு பதிலாக வீட்டுக் கடனைச் செலுத்துவது போன்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே முன்னுரிமை அளிக்கும் நிலைக்கு பலர் தள்ளப்படலாம்.

சுயதொழில் செய்து வரும் திருவாட்டி விக்னேஸ்வரி ரத்தினம், இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து தமது 5 அறை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக் கடனுக்கு ரொக்கம் செலுத்தி வருகிறார்.

வீட்டுக் கடனுக்கு தமது மத்திய சேமநிதியில் இருந்த அனைத்து தொகையையும் பயன்படுத்திய பிறகு, ரொக்கத்தைச் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

அவர் ஓய்வுக்கால சேமிப்புக்காகத் தம்முடைய மத்திய சேமநிதிக் கணக்கில் தொகை ஏதும் நிரப்பவும் இல்லை.

மத்திய சேமநிதிப் பயன்பாட்டையும், வீடு வாங்குவதையும் ஒழுங்காகத் திட்டமிட்டால், மக்கள் பொருளியல் மந்தநிலையிலும் தங்களுடைய ஓய்வுக்காலத்திற்கு சேமிக்கலாம் என்று கூறுகின்றனர் சொத்து முகவர்கள்.

வீட்டு உரிமையாளர்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கொள்கைகளையும் மத்திய சேமநிதியின் விதிமுறைகளையும் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.  அவற்றைப் புரிந்துகொண்டு செயல்பட்டால், போதிய  ஓய்வுக்கால சேமிப்பு இருப்பதை உறுதிசெய்யலாம்.

என்று Knight Frank சொத்து முகவர் திரு. மார்க் PS. மணியம் கூறினார்.

அடைமானக் கடனில் எப்படிச் சேமிக்கலாம்?

தற்போதைய வீட்டுக் கடனை மீட்டுக்கொண்டு, குறைந்த வட்டி விகிதம் இருக்கும் கடன் திட்டத்தை வழங்கும் நிதி நிலையத்திற்கு மாறுவது (Refinancing) ஒரு வழி.
சிங்கப்பூர் வங்கிகளுக்கு இடையிலான தினசரி வட்டி விகிதம் (Singapore Interbank Offered Rates) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

ஜூன் 2019- 1.9% வட்டி
ஜூன் 2020 - 0.25% வட்டி

அதனைக் கொண்டு வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுவதால், வீட்டுக் கடன்களின் வட்டியும் குறைந்துள்ளது.

வட்டி வகிதம் குறைவாக உள்ள வேளையில், வீட்டு உரிமையாளர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு,  குறைந்த வட்டியைக் கொண்ட திட்டங்களுக்கு மாறலாம்

என்று Propnex சொத்து முகவர் திரு. ராஜன் சொன்னார்.

திருவாட்டி. விக்னேஸ்வரி, தாம் மற்ற நிதி நிலையங்களின் கடன் திட்டத்திற்கு மாற முடியும் என்று முன்பு அறியவில்லை எனச் சொன்னார். அவர் மற்ற கடன் திட்டத்திற்கு மாறுவதையொட்டிப் பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது....

ஓய்வுக்காலத்திற்கு சேமிக்க, மூதலீடு செய்வதைப் போன்ற பல வழிகள் உண்டு..அவற்றில் ஒன்று வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துவது.

அதன் மூலம், உரிமையாளர்கள், தங்கள் ஓய்வுக்காலத்திற்கு சேமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தலாம்.

ரொக்கம் அதிகம் இருக்கும் போது, உரிமையாளர்கள் அதனைக் கொண்டு வீட்டுக் கடனின் ஒரு பகுதியைத் தீர்க்கலாம். 

3 அறை வீட்டை வாங்கிய திருவாட்டி மீரா வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கடன் நிறைவுபெறுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே வீட்டுக் கடனைச் செலுத்திவிட்டார். 

அவ்வாறு செய்ததன் மூலம், தம்முடைய கடனுக்கு குறைவான வட்டியே செலுத்தவேண்டியிருந்ததாகத் திருவாட்டி மீரா சொன்னார்.

சிறப்புக் குறிப்பு: வீட்டுக்கடனைச் செலுத்த மத்திய சேம நிதிக்குப் பதிலாக ரொக்கத்தைப் பயன்படுத்துவது....

கையில் உபரி ரொக்கம் வைத்திருப்போர், முழுமையாக மத்திய சேம நிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ரொக்கத்தைப் பயன்படுத்தி வீட்டுக் கடனைச் செலுத்துவது குறித்துப் பரிசீலிக்கலாம்.

மத்திய சேம நிதியின் சாதாரண கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 3.5 விழுக்காடு வரை வட்டி கிடைப்பதால், வீட்டு உரிமையாளர்களின் சேமிப்பு அதில் விரைவாக அதிகரிக்கும்.

ஓய்வுக்காலத்தில் வீட்டின் மூலம் வருமானம் ஈட்டுவது எப்படி?

ஓய்வுக்காலத்தை எட்டுவோர் வீட்டின் மூலம் பணம் ஈட்ட, வீட்டின் அறையை வாடகைக்கு விடலாம், சிறிய வீட்டிற்கு மாறலாம் அல்லது கழகத்திடம் வீட்டின் எஞ்சிய குத்தகைக் காலத்தைத் திரும்பக் கொடுக்கலாம்.

படம்: Gaya Chandramohan

சிறிய வீட்டிற்கு மாறுவது

மூத்த வீட்டு உரிமையாளர்கள், வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் Silver Housing Bonus (SHB) திட்டம் வழி, தங்களின் மத்திய சேமநிதியில் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்கலாம்.

3 அறை வீட்டிற்கோ அதை விட சிறிய வீட்டிற்கோ மாற எண்ணுவோர், திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் தங்கள் மத்திய சேம நிதி ஓய்வுக் கணக்கில் பணம் நிரப்பி, வாழ்நாள் முழுவதும் மாதாந்தரத் தொகை பெற CPF Life திட்டத்துக்கு பதிந்துகொண்டால், அவர்கள் 30,000 வெள்ளி வரையிலான Silver Housing போனஸைப் பெறலாம்.

குத்தகைத் திரும்ப வாங்கும் திட்டம் (Lease Buyback Scheme)

தகுதியுள்ள உரிமையாளர்கள், வீட்டின் குத்தகையில் ஒரு பங்கை, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்குத் திரும்ப விற்பது குறித்துப் பரிசீலிக்கலாம்.

குத்தகையை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகை, உரிமையாளரின் மத்திய சேமநிதியின் ஓய்வுக்கால கணக்கில் நிரப்பப்படும்.

CPF Life-இன் கீழ், வாழ்நாள் முழுவதும் மாதாந்தரத் தொகை பெற அது வகை செய்யும். மேலும், எஞ்சிய தொகையை அவர்கள் கையில் ரொக்கமாகப் பெறலாம். LBS போனஸ் தொகையாக 30,000 வெள்ளிவரை பெறவும் வாய்ப்புண்டு.

SHB, LBS போனஸ் குறித்து மேல்விவரம் பெற, வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இணையப்பக்கத்தை நாடவும்.

பொருளியல் சூழல் சவாலான ஒன்றாக இருந்தாலும், வீட்டு உரிமையாளர்கள், வீட்டுக் கடன் செலுத்துவதில் சேமிக்க வழிகள் உள்ளன. ஓய்வுக்காலத்தின்போது வீட்டைக் கொண்டு வருமானம் பெறலாம்.

வருங்காலத்திற்கான உங்கள் திட்டத்திற்கு மத்திய சேமநிதி எவ்வாறு உதவிசெய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள். மேல் விவரங்களுக்கு: cpf.gov.sg/BeReady
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்