Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியர் - நன்கொடை வழங்க முன்வரும் பல்வேறு இனத்தவர்

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க, எதிர்பாராத அளவில் நன்கொடை குவிந்து வருவதாக ItsRainingRaincoats அமைப்பு கூறியது.

வாசிப்புநேரம் -
பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியர் - நன்கொடை வழங்க முன்வரும் பல்வேறு இனத்தவர்

(படம்: Facebook/ItsRainingRaincoats)

பாரந்தூக்கி முறிந்து விழுந்ததில் மாண்ட ஊழியரின் குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க, எதிர்பாராத அளவில் நன்கொடை குவிந்து வருவதாக ItsRainingRaincoats அமைப்பு கூறியது.

28 வயது வேல்முருகன் முத்தையன், நொவீனா வட்டாரத்தின் ஜாலான் டான் டொக் செங் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார்.

நன்கொடைத் திரட்டு பற்றி ItsRainingRaincoats நிறுவனர் திருவாட்டி தீபா சுவாமிநாதனிடம் பேசியது 'செய்தி'.

17 மணி நேரத்தில் சுமார் 129,000 வெள்ளி திரட்டப்பட்டுள்ளது.

இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி 100,000 வெள்ளி மட்டுமே இலக்காக இருந்தது.

திரட்டப்படும் நன்கொடைத் தொகை நிமிடத்திற்கு நிமிடம் ஏறிக்கொண்டே வருகிறது.

இந்த முயற்சிக்கு இந்த அளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் குறுகிய காலத்தில். இதனைக் கண்டு, நான் மனம் மகிழ்கிறேன்.

என்றார் திருவாட்டி தீபா.

இனம், சமயம், நாடு அனைத்தையும் தாண்டி நன்கொடை வழங்க 2,156 பேர் முன்வந்துள்ளனர்.

நன்கொடைத் திரட்டு எங்களின் யோசனை கூட அல்ல. திரு. வேல்முருகனின் மரணத்தைப் பற்றி எங்களின் Facebook பக்கத்தில் பொதுமக்கள் சிலர் பதிவு செய்தனர். பின்னர், நன்கொடை கொடுக்க விரும்புவதாகவும் அதற்கு ஏதேனும் வழி உண்டா என்றும் அவர்கள் கேட்டனர். அதற்கு இணங்கியே நன்கொடை திரட்டத் தொடங்கினோம்.

என்றார் திருவாட்டி தீபா.

திரட்டப்பட்ட நன்கொடையைக் கொண்டு, மாண்ட திரு. வேல்முருகனின் பிள்ளையின் கல்விக்கு உதவ எண்ணுகிறது ItsRainingRaincoats அமைப்பு.

மாண்ட திரு. வேல்முருகனின் மனைவி கர்ப்பமாக உள்ளார். அவர்களின் குழந்தை ஒளிமயமற்ற வாழ்க்கையை எதிர்நோக்கக் கூடாது. அந்தக் குழந்தையின் எதிர்காலக் கல்விக்கு இப்பணத்தை வங்கியில் வைப்புத் தொகையாகப் போடுவது எங்கள் எண்ணம்.

என்றார் திருவாட்டி தீபா.

நன்கொடைத் திரட்டு இன்றிரவு நிறைவுபெறும்.

மேல் விவரங்களுக்கு: http://itsrainingraincoats.give.asia/cranecollapsevictim 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்