Images

வெப்பத் தாக்கத்தால் மாண்ட முழுநேர தேசிய சேவையாளர் டேவ் லீயை மருத்துவ நிலையத்திற்கு அனுப்பிவைப்பதில் அதிக நேரம் பிடித்தது: சுயேச்சை மருத்துவ நிபுணர்

வெப்பத் தாக்குதலால் மாண்ட முழுநேர தேசிய சேவையாளர் டேவ் லீயை (Dave Lee), மருத்துவ நிலையத்திற்கு அனுப்பிவைப்பதில், அதிக நேரம் பிடித்ததாக சுயேச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் கென்னத் ஹெங் தெரிவித்துள்ளார்.

அதில் ஏற்பட்ட தாமதம், லீயின் மரணத்துக்குப் பங்களித்திருக்கலாம் என்றார் அவர்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி, டேவ் லீ, 8 கிலோமீட்டர் விரைவு அணிவகுப்பில் ஈடுபட்டிருந்தபோது வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டார்.

பின்னர் 30ஆம் தேதி, அவர் மருத்துவமனையில் மாண்டார்.

லீயின் மரண விசாரணையில், மருத்துவ நிபுணர் டாக்டர் ஹெங் இன்று சாட்சியமளித்தார்.

பிடோக் முகாமின் மருத்துவ நிலையத்திலும் பின்னர் சாங்கி பொது மருத்துவமனையிலும் லீக்கு முறையான மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

ஒரு சில அம்சங்கள் இன்னும் மேம்பட்ட முறையில் கையாளப்பட்டிருக்கலாம் என்றார் அவர்:

  • உடல் வெப்பம் அதிகமானால், அதனை அரை மணி நேரத்திற்குள் 39 டிகிரி செல்சியஸிற்குக்கீழ் கொண்டுவருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சாட்சியமளித்த மருத்துவர் கூறினார்.
  • அவ்வாறு செய்திருக்க, டேவ் லீ, 10 முதல் 15 நிமிடத்துக்குள் பிடோக் முகாமின் மருத்துவ நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்க வேண்டும். ஆயினும், டேவ் லீயை அங்கு கொண்டுசெல்லச் சுமார் 40 நிமிடம் பிடித்தது.
  • மருத்துவ நிலையத்திற்கு லீ தாமதமின்றி அனுப்பப்பட்டிருந்தால், ரத்த அழுத்தத்தைச் சீர்படுத்துவதற்குரிய முறையான சிகிச்சை அவருக்குக் கிடைத்திருக்கும் என்றார் டாக்டர் ஹெங்.
  • தாமதம் காரணமாக, உடல் வெப்பம் தொடர்ந்து உயர்ந்து அவரது உடல்நிலை மோசமாகி வழக்கநிலைக்குத் திரும்புவது சிரமமானது.

காவல்துறையைச் சேர்ந்த மூத்த விசாரணை அதிகாரி ஒருவரும் இன்று சாட்சியமளித்தார். லீயின் மரணத்தில் சூது ஏதும் இல்லை என்றார் அவர்.

அத்துடன், லீயை உடனடியாக மருத்துவ நிலையத்துக்கு அனுப்புவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை, மேற்பார்வை அதிகாரி கேப்டன் டான் பாவ்ஷு (Tan Baoshu) நிராகரித்ததை அவர் பதிவுசெய்த அறிக்கை விளக்கமாகக் குறிப்பிட்டது.

லீக்கு உடல் சோர்வு ஏற்பட்டதாக கேப்டன் டான் மதிப்பிட்டிருந்தார்.

லீயால் தண்ணீர் அருந்தமுடியாத நிலையிலும் நரம்புவழி திரவமருந்து செலுத்தப்படுவதை அவர் நிராகரித்தார்.

மருத்துவ வாகனம் பயன்படுத்தப்படுவதையும் மேற்பார்வை அதிகாரி நிராகரித்தார். இவையெல்லாம் விதிமீறல்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

மரண விசாரணை அறிக்கையை, வரும் 27ஆம் தேதி மரண விசாரணை அதிகாரி வெளியிடுவார். 

Top