Images
  • Defamation
    (படம்: Facebook/Leong Sze Hian, Tang See Kit)

பிரதமர் லீக்கு எதிராக வலைப்பதிவாளர் லியோங் தொடுத்த அவதூறு வழக்கு தள்ளுபடி


பிரதமர் லீ சியென் லூங் தொடுத்த அவதூறு வழக்கிற்கு எதிராக வலைப்பதிவாளர் லியோங் ஸி ஹியன் (Leong Sze Hian) தொடுத்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்திருக்கிறார்.

அத்தகைய பதில் அவதூறு வழக்குத் தொடுப்பதற்குரிய அங்கீகரிக்கப்பட்ட நடைமுறை இல்லையென்று, நீதிபதி ஏடிட் அப்துல்லா (Aedit Abdullah) தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அப்படியொரு பதில் அவதூறு வழக்கு, எந்தச் சட்ட அடிப்படையில் தொடுக்கப்பட முடியுமோ அதுவே இல்லையென்பதால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அண்மைத் தீர்ப்பு காரணமாக, பிரதமர் தொடுத்த அவதூறு வழக்கில் விசாரணை தொடங்குவதற்கு இருந்த தடை நீங்கியுள்ளது.

முன்னதாக, பிரதமர் தம்மீது தொடுத்துள்ள அவதூறு வழக்கு நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்ளும் செயல் எனத் திரு. லியோங் வழக்குத் தொடுத்திருந்தார்.

1MDB தொடர்பான மோசடியில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதில், மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கிற்குப் பிரதமர் லீ உதவி செய்ததாகக் குறைகூறும் கட்டுரையைத் திரு. லியோங் தமது Facebook-இல் பகிர்ந்திருந்தார்.

அதற்காகப் பிரதமர், அந்த வலைப்பதிவாளர் மீது அவதூறு வழக்குத் தொடுத்தார்.
 

Top