Images
  • thai cave diver
    (படம்: Chng Shao Kai / TODAY)

'அவர்கள் என் பிள்ளைகளாக இருந்தால்...' நெகிழ்கிறார் தாய்லந்து சென்ற சிங்கப்பூர் முக்குளிப்பாளர்

தாய்லந்துக் குகையில் சிக்கியிருந்த சிறுவர்களை மீட்கும் பணியில் அங்கம் வகித்தவர் சிங்கப்பூர் முக்குளிப்பாளர் டக்லஸ் டைலன் இயோ (Douglas Dylan Yeo).

முதலில் 'போகவேண்டுமா?' என்று யோசித்த திரு இயோ, பின்னர் சியாங் ராய் சென்றார். மீட்புக் குழுவினருடன் இணைந்து, அனைவரும் பத்திரமாக வெளியே வரும்வரை அயராது பணியாற்றினார்.

கும்மிருட்டு, வழுக்கும் பாதை, சேற், சகதி, கண்ணுக்கெட்டியவரை வெளிச்சமில்லை...இப்படிப் பலவற்றை எதிர்நோக்கினார். ஆனால் ஒரு சிறுவன் வெளிக்கொணரப்படுவதைப் பார்த்த நொடி, அனைத்துச் சிரமங்களும் தவிடுபொடியாயின.

சிறுவனின் கண்கள் ஆயிரம் கதைகளைக் கூறத் தயாராக இருந்ததாக நெகிழ்கிறார் திரு இயோ.

அவருடன் டுடே நாளேடு நடத்திய நேர்காணலிலிருந்து சில பகுதிகள்:

மீட்புப் பணியில் சேரும் முடிவு எதனால்?

எனக்கு இந்த ஆண்டு 50 வயது நிறைவடைகிறது. இந்த மீட்பு முயற்சியில் பங்கெடுத்ததை என் வாழ்நாள் பரிசாகக் கருதுகிறேன்.
எனக்கு 3 மகன்கள். இவர்கள் என் மகன்களாக இருந்தால்? இதுதான் எனக்குத் தோன்றிய முதல் கேள்வி. உதவிக்காகக் காத்திருக்கமாட்டேன் அல்லவா? களமிறங்குவேன். அதைத்தான் செய்தேன். 


மீட்புக் குழுவில் இணைய நீங்கள் எடுத்த முடிவு குறித்து உங்கள் குடும்பத்தினரின் கருத்து?

குடும்ப ஆதரவின்றி எதுவும் சாத்தியமில்லை. என் மகன்கள் "உங்களால் முடியும்" என்று வழியனுப்பிவைத்தனர்.
என் தாயும், மனைவியும் பக்கபலமாக இருந்தனர்.


எந்தப் பணியில் ஈடுபட்டீர்கள்? என்ன செய்தீர்கள்?


சேம்பர் (Chamber)2-இல் எனக்குப் பணியளிக்கப்பட்டிருந்தது. சேம்பர் ஒன்றில் சிறுவர்கள் சிக்கியிருந்தனர்.
சேம்பர் 3 வெளியேறுவதற்கான வழி.

நாங்கள் மருத்துவர்களின் உத்தரவுக்காகக் காத்திருந்தோம். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன், சிறுவர்களைப் படுக்கையில் கிடத்தித் தூக்கி வரவேண்டும்.
தூக்கிவரும்போது அவர்கள் மூச்சு விடுவது தெரிந்தது. அவர்கள் உடல்நிலை சீராக இருந்தது. அதைப் பார்க்க நிம்மதியாக இருந்தது.


மறக்கமுடியாத அனுபவம்?


அதில் ஆகக் குறைந்த வயதுள்ள சிறுவன் மீட்கப்பட்ட தருணம் மிகவும் நெகிழ்ச்சியானது.
அவனது சிறிய கண்கள் திறந்தன. அவன் நேராக என்னைப் பார்த்தான். 'நீதான் நாயகன்' என்று என் மனம் சொல்லிற்று. அந்த உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாது.

மீட்பு வெற்றிகரமாக முடிந்தவுடன்?

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்பின் அறிமுகமில்லாத பல முக்குளிப்பாளர்கள் ஒரு நோக்கத்துக்காகக் கூடியிருந்தோம். மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தவுடன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். அது விலைமதிப்பற்ற தருணம்

முத்தாய்ப்பாக....

ஒருவர் மற்றொருவருக்கு ஊக்கமளித்துக்கொண்டோம். இவ்வளவு மனவுறுதியுடன் அந்தச் சிறுவர்களால் இருக்க முடியும் என்றால், நம்மால் ஏன் முடியாது - இதுதான் எங்களுக்கு உந்துசக்தியாக இருந்தது.  

Top