Images

உடல்நலம் இல்லையா? செயலி வழி மருத்துவச் சேவை... பயன்படுத்திப்பார்த்தது 'செய்தி'

-பிரியங்கா

நமக்குச் சாதாரண சளி இருந்தால்கூட மருந்தகத்திற்குச் செல்லவேண்டியிருக்கிறது; போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துச் செல்லவேண்டும், வேலையிலிருந்து அரை நாள் விடுப்பு எடுக்கவும் நேரலாம்.

அத்தகைய சூழலைத் தவிர்க்கும் விதத்தில் திறன்பேசிச் செயலி வழியாக நாம் இருக்கும் இடத்திலிருந்தே நேரடியாக மருத்துவரை அணுகலாம்.

Telemedicine என்ற அணுகுமுறை வழியாக, நாம் நிபுணத்துவ மருத்துவச் சேவையையும் மருந்தையும் மருத்துவ விடுப்பையும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், செயலி வழியாக மருத்துவரைப் பார்ப்பது உண்மையில் சாத்தியப்படுமா? திருப்தியாக இருக்குமா? தனிப்பட்ட சந்திப்பு அதிகம் தேவைப்படும் மருத்துவச் சேவைக்கு இது பொருந்துமா? இப்படிப் பல கேள்விகள்....

Whitecoat எனும் மருத்துவச் சேவைச் செயலியைப் பயன்படுத்திப் பார்த்தது 'செய்தி'.

இதற்கான கட்டணம் எவ்வளவு?:

  • திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை - காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை: 25 வெள்ளி
  • திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை - இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 வரை: 50 வெள்ளி
  • ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறைகள்- காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை: 50 வெள்ளி

முழு நேர மருத்துவர்களா?
- Whitecoat மருந்தகத்தில் முழுநேர மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்
- மற்ற சில மருத்துவச் சேவைச் செயலிகளில் மருத்துவர்கள் பகுதி நேரமாகப் பணிபுரியலாம்

மருந்துகள் எப்படி வழங்கப்படுகிறன?
- மருத்துவர் காணொளி வாயிலாகக் கண்டறிந்த பிரச்சினைக்குத் தீர்வளிக்கும் மருந்துகளைப் பரிந்துரைப்பார். நம்மிடம் ஏற்கனவே ஒருவகை மருந்து இருந்தால், அந்த மருந்தை வாங்கத் தேவையில்லை.

சந்தேகங்கள் இருந்தால், மருத்துவரைப் பின்னர் தொடர்புகொள்ளலாமா?
- செயலி வழியாக, மருந்தகத்தைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம்.

உடல் வெப்பம் அல்லது சுவாசப் பரிசோதனைகள் எப்படி நடத்தப்படும்?
- மருத்துவரை அணுகும் முன்னர், உடல் வெப்பநிலையையும் ரத்த அழுத்தத்தையும் சோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது. இல்லை என்றால், மருத்துவர்கள் காணொளியில் தெரியும் அறிகுறிகளைப் பயன்படுத்துவர்.

மருத்துவர்களுக்கு நோயாளி குறித்த விவரங்கள் சரிவரப் பிடிபடாமல்போனால் உடனடியாக மருத்துவரை நேரில் சென்று காணும்படி அறிவுரை கூறுகிறார்கள். அதனால் இதன் நம்பகத்தன்மையில் திருப்தி ஏற்படுகிறது.

அடிக்கடி நம்மைப் பாதிக்கும் சாதாரண உடல்நலப் பிரச்சினைகளுக்கு இது தீர்வாக இருக்கலாம். மற்ற பிரச்சினைகளாக இருந்தால் மருத்துவரை நேரில் சென்று பார்ப்பதே நல்லது.

செயலி வழி மருத்துவச் சேவை வழங்கும் நிறுவனங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ள: https://www.moh.gov.sg/our-healthcare-system/licensing-experimentation-and-adaptation-programme
 

Top