Images
  • d
    (படம்: Facebook/Heng Swee Keat)

வேலை அனுமதிக் கொள்கைகளை மறுஆய்வு செய்யும் வேளையில் திறந்த மனப்பான்மையை நிலைநாட்டவேண்டும்: துணைப்பிரதமர் ஹெங்

சிங்கப்பூர், வேலை அனுமதி கொள்கைகளை மறுஆய்வு செய்துவரும் வேளையிலும், உலகத்தை நோக்கித், அதன் திறந்த மனப்பான்மையை நிலைநாட்டவேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) தெரிவித்துள்ளார்.

வர்த்தகத் தலைவர்களும், நிபுணர்களும் கலந்துகொண்ட FutureChina அனைத்துலகக் கருத்தரங்கில் அவர் உரையாற்றினார்.

"கொள்கைகள் நமது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுவதை உறுதிசெய்ய, அவற்றை மாற்றியமைக்கிறோம்." என்று அவர் கூறினார்.

வேலை அனுமதி கொள்கைகளை மறுஆய்வு செய்வது, நியாயமான ஆள்சேர்ப்பு நடைமுறைகளை வலுப்படுத்துவது, நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள அதிக முயற்சிகளை எடுப்பது போன்றவற்றைத் திரு. ஹெங் சுட்டினார்.

இருப்பினும், உலகத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொண்டால், அது நம்மை வெற்றியடையச் செய்துள்ள முயற்சிகளை கீழறுக்கசெய்யும்.

என்றும் அவர் சொன்னார்.

உலகமயமாதல் மூலம் அனைவரும் பயனடைவதற்கு, நாடுகள் வெளிப்படையான போக்கைக் கடைப்பிடிப்பதும், மற்ற நாடுகளுடன் தொடர்பில் இருப்பதும் அவசியம் என்று வர் வலியுறுத்தினார்.

சவால் மிகுந்த காலகட்டத்தில், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கு வர்த்தகங்களுக்கு இடையில் பங்காளித்துவ முயற்சிகள் அவசியம் என்பதையும் திரு. ஹெங் சுட்டினார்.

கிருமிப் பரவல் சூழலிலும், ஆசியானுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம், இவ்வாண்டின் முதல் பாதியில் 20 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.

புதிய அனைத்துலக நில-கடல் வர்த்தகப் பாதை அதனைச் சாத்தியமாக்கியது.

அந்தப் போக்குவரத்துப் பாதை, சிங்கப்பூரும், சீனாவும் கூட்டாக மேற்கொள்ளும் சோங்சிங் (Chongqing) இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதி.

வட்டாரத்திலும், உலக அளவிலும் தொடர்புகளை வலுப்படுத்தி, நோய்ப்பரவலில் இருந்து வலுவுடன் மீண்டு வருவதற்குச் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு அது ஓர் எடுத்துக்காட்டு என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார். 

Top