Images
  • DPM Personal Cases
    (படம்: REUTERS/Pawel Kopczynski/File Photo)

அரசாங்கம் கடந்த 3 ஆண்டுகளில் 41 தனிநபர் தகவல் திருட்டு சம்பவங்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் செய்துள்ளது: துணைப் பிரதமர் தியோ


அரசாங்கம் கடந்த மூவாண்டில் தனிநபர் தகவல்களைக் கொண்ட மடிக் கணினிகள் திருடுபோன 41 சம்பவங்கள் குறித்துக் காவல்துறையிடம் புகார் செய்திருப்பதாகத் துணைப் பிரதமர் தியோ சீ ஹியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற நியமன உறுப்பினர் வால்ட்டர் தெசியராவின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் துணைப் பிரதமர் அவ்வாறு குறிப்பிட்டார்.

30 சம்பவங்களில் மடிக் கணினிகளிலிருந்த தனிநபர் தகவல்கள் ஊடுருவப்படவில்லை.

எஞ்சிய 11 சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு அதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2014 முதல் 2018ஆம் ஆண்டுவரை, தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான எத்தனை சம்பவங்களை, அரசாங்கம் காவல்துறையிடமோ, தனிநபர் தகவல் பாதுகாப்புக் குழுவிடமோ புகார் அளித்துள்ளது என்று இணைப் பேராசிரியர் தெசியரா கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்த துணைப் பிரதமர் தியோ, மடிக் கணினிகள் திருடுபோன சம்பவங்களில் தகவல் பாதுகாப்பு தொடர்பான மோசடிகள் குறித்த சந்தேகம் எழுந்தால் அரசாங்க அமைப்புகள் காவல்துறையிடம் புகாரளிக்கும் என்று குறிப்பிட்டார்.

அத்தகைய சம்பவங்கள் குறித்து, தனிநபர் தகவல் பாதுகாப்புக் குழுவிடம் புகார் அளிக்கப்படமாட்டாது என்றார் அவர். அதுகுறித்து விசாரணை நடத்துவது குழுவின் பொறுப்பு அல்ல என்பதைத் திரு. தியோ சுட்டினார்.

Top