Images
  • agc
    (படம்: சேனல் நியூஸ்ஏஷியா)

அரசாங்க வழக்குரைஞருக்கு மது அருந்திவிட்டு வாகனமோட்டியதற்காக அபராதம்

தலைமைச் சட்ட அலுவலகத்தின் சிவில் பிரிவைச் சேர்ந்த
துணை அரசாங்க மூத்த வழக்குரைஞருக்கு, மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தியதற்காக 1,600 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாகனமோட்ட அவருக்கு ஓராண்டுத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

39 வயது ஜெயேந்திரன் ஜெயபால் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி அதிகாலையில் Second Hospital Avenue வழியே சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்துக் காவல்துறை அதிகாரியால் நிறுத்தப்பட்டார்.

அதிகாரி நடத்திய சோதனையிலும் பின்னர் போக்குவரத்துக் காவல்துறைப் பிரிவில் நடத்தப்பட்ட சோதனையிலும் ஜெயேந்திரன் அனுமதிக்கப்பட்ட அளவுக்குக் கூடுதலாக மதுபானம் அருந்தியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

கேளிக்கை விடுதியில் மதுபானம் அருந்தியதை ஜெயேந்திரன் ஒப்புக்கொண்டார்.

அது தனது முதல் குற்றம் என்றும் அதனைத் தான் ஒப்புக்கொண்டதாகவும் ஜெயேந்திரன் கூறினார்.

காவல்துறை அதிகாரிகளோடு தாம் ஒத்துழைத்ததாகவும் கூறிய ஜெயேந்திரன் குறைந்தபட்சத் தண்டனையை விதிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தவிர்க்க முடியாத சூழலில் ஜெயேந்திரன் மது அருந்தியதைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக நீதிபதி கூறினார்.

எனினும் அந்த வாதத்தைத் தாம் முழுமையாக ஏற்கவில்லை என்றும் அவர் சொன்னார்.

முதல்முறை மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்கு 6 மாதம் வரை சிறைத்தண்டனையோ ஆயிரம் வெள்ளியிலிருந்து 5,000 வெள்ளிவரை அபராதமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.  

Top